முக்கிய பிரமுகர்கள் செல்லும் போது, சாலைகளில் 50 அடிக்கு ஒருவர் வீதம் பொலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். அதுபோன்ற பாதுகாப்பு பணியில் பெண் பொலீசாரும் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் பொலீசார் சில சமயம் பலமணி நேரம் சாலைகளில் கால்கடுக்க நிற்கவேண்டியது வரும்.
அது போன்ற சமயங்களில் இயற்கை உபாதையால் பெண் பொலீசார் அவதிப்படும் நிலை இருந்தது. இதை கருத்தில் கொண்டு இனி பெண் பொலீசாரை சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதையடுத்து சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட பெண் பொலீசாருக்கு விலக்கு அளித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “சாலையில் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் பொலீசாருக்கு விலக்கு அளிக்கப்பட்ட செய்தியை அறிந்தேன்.
பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது இவ்வாறு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைக்காக, அவசரத் தேவைகளுக்காகவும் என்ன செய்வார்கள் என்பது பற்றி என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார், நானும் வருந்தி இருக்கிறேன். அந்தவகையில் இந்த ஆணையை கண்டு மன நிம்மதி அடைகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.