நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘அவள்’ படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா கண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் என்பவர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘ப்ளைண்ட்’ என்னும் கொரியப் படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் தான் நெற்றிக்கண்.இந்தப் படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற முதல் பாடல் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாடலில் முன்களப் பணியாளர்களுக்கு மரியாதை செய்திருந்தது மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.
நெற்றிக்கண் படத்திற்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது நெற்றிக்கண் படக்குழுவினர் ஓடிடி முடிவைக் கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நெற்றிக்கண் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.