உடல் எடைக் குறித்த கேலிப் பதிவுகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சாடியிருக்கிறார் சனுஷா
தமிழ், மலையாளத்தில் நடிகையாக வலம் வருபவர் சனுஷா. தமிழில் ‘பீமா’, ‘ரேனிகுண்டா’, ‘நாளை நமதே’, ‘எத்தன்’, ‘கொடி வீரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மனச்சோர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினையினால் இவரது உடல் எடை அதிகரித்தது.
மனச்சோர்வு குறித்த பல்வேறு பதிவுகளையும் வெளியிட்டிருந்தார் சனுஷா. தற்போது உடல் எடையைக் குறைக்கத் தொடங்கியுள்ளார். இதனால் தனது உடல் எடையை முன்வைத்து கருத்து தெரிவித்தவர்களுக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் சனுஷா.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“எனது எடை குறித்துப் பேசிய, என்னை விட அதிகமாகவே கவலைப்பட்ட, அதிக வருத்தத்துக்கு உள்ளானவர்களுக்கு, அன்பார்ந்தவர்களே, எடை குறைக்கவும், அழகாக இருக்கவும் மட்டுமே ஒருவர் உயிர் வாழ்வதில்லை. ஒருவரது உடலை வைத்து கேலி செய்யும் அளவுக்கு உங்களுக்குத் தைரியம் இருக்கும் போது ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். ஒருவரை நோக்கி இரண்டு விரல்களை நீங்கள் கட்டும்போது மற்ற மூன்று விரல்கள் உங்களை நோக்கியிருக்கிறது, எனவே நீங்களும் அவ்வளவு கச்சிதமானவர் கிடையாது. உங்கள் உடலையும், மனதையும் பார்த்துக் கொள்ளுங்கள்” இவ்வாறு சனுஷா தெரிவித்துள்ளார்.