வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய நிறுவனம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
‘அசுரன்’ படத்திற்கு வெற்றிமாறன் இயக்கும் திரைப்படம் ‘விடுதலை’. பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடிப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் போலீஸ் அதிகாரியாகவும், நடிகர் கிஷோர் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளனர். சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சத்தியமங்கலம் காடுகளில் கடும் குளிரில் படமாக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனத்தின் எலர்டு குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.
ஏற்கனவே ‘விடுதலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சூரி போலீசாகவும், கைதியாக விஜய் சேதுபதியும் இடம்பெற்றிருந்தனர். தமிழில் உருவாகும் இத்திரைப்படம் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. முதல் முறையாக வெற்றிமாறன் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பெற்று நிறுவனம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல ஆடியோ நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் ‘விடுதலை’ படத்தின் ஆடியோ உரிமையை பெற்றுள்ளது.