2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்று அதிபராக பதவியேற்றார். குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் தோல்வி அடைந்தார்.
அதன்பின்னர் ட்ரம்ப் பெரிதாக பொதுவெளிகளில் தென்படுவதும், பேசுவதும் குறைந்துவிட்டது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக ட்ரம்ப் சிக்னல் கொடுத்துள்ளார். மேலும், வெள்ளை மாளிகையின் மூத்த மருத்துவ ஆலோசகர், சீனா மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
வட கரோலினா மாகாணத்தில் உள்ள கிரீன்வைலில் குடியரசு கட்சி மாநாடு நடைபெற்றது. இதில் டொனால் ட்ரம்ப் பங்கேற்று பேசினார். வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி ஃபவுசி கொரோனாவை கையாளும் விதத்தை ஏற்கெனவே பல குடியரசு கட்சி தலைவர்கள் சாடியுள்ளனர்.
இந்நிலையில், அந்தோணி ஃபவுசியை டொனால்ட் ட்ரம்பும் விமர்சித்துள்ளார். அவர் பேசியபோது, “அந்தோணி ஃபவுசி சிறந்த டாக்டர் அல்ல, சிறந்த விளம்பர விரும்பி. ஏறக்குறைய எல்லா விவகாரத்திலும் அவர் தவறான முடிவுகளை எடுத்துள்ளார்” என்று தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலிலும் தான் போட்டியிடப்போவதாக அவர் சிக்னல் கொடுத்துள்ளார். அவர், “ஏமாற்று வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதை அவர்கள் 2024ஆம் ஆண்டு வரை நிறுத்தப்போவதில்லை” என்று கூறினார்.