நைஜீரிய ஜனாதிபதியின் கருத்தை டுவிற்றர் நிறுவனம் நீக்கியதற்கு பதிலடியாக, அந்த நாட்டில் ருவிற்றர் தடை செய்யப்பட்டுள்ளது.
நைஜீரிய நாட்டின் ஜனாதிபதி முகமது புஹாரி. அவரது அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சிவில் போர் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனை தொடர்ந்து, 1967-70 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கொள் காட்டி வன்முறையை தூண்டும் வகையில் ஜனாதிபதி முகமது தனது ருவிற்றர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
ஜனாதிபதி தனது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இன்று தவறான முறையில் நடந்து கொள்ளும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டு போரில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அழிவுகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 30 மாதங்களாக எங்களுடன் களத்தில் இருந்தவர்கள், போரை சந்தித்தவர்கள், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியிலேயே நடத்துவார்கள்’ என தெரிவித்தார்.
அவரது கருத்து போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது தாக்குதலை நடத்த தூண்டுவது போல அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி முகமதுவின் கருத்தை தங்கள் வலைதள பக்கத்தில் இருந்து ருவிற்றர் நிறுவனம் நீக்கியது.
இந்நிலையில், ஜனாதிபதியின் ருவிற்றர் பதிவு நீக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் ருவிற்றருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் சமூகவலைதளமான ருவிற்றரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் நாட்டில் ருவிற்றர் செயல்பட காலவரையறையற்ற தடை விதிக்கப்படுவதாக நைஜீரிய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.