பிரதமர் மோடியிடம் 6 வயது சிறுமி புகார் அளித்ததன் அடிப்படையில் அங்கு ஒன்லைன் வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் நிலையில், பள்ளிப் பாடங்கள் ஒன்லைன் வகுப்புகள் மூலம் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் ஆன்லைன் வகுப்புகள் நீண்டநேரம் நடப்பதால் குழந்தைகளுக்கு அதிகவேலை இருப்பதாக காஷ்மீரைச் சேர்ந்த 6 வயது சிறுமி பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்திருந்தார்.
45 நிமிடங்கள் ஓடும் அந்தக்காட்சியை ஒளரங்கசீப் நக் ஷ் பண்டி என்ற பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமரிடம் புகார் கூறி சிறுமி பேசும் காட்சி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிறுமி கூறியிருந்ததாவது,
எனது ஒன்லைன் வகுப்பு காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணி வரை நடக்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது, சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்களும் பின்னர் கம்ப்யூட்டர் வகுப்பும் தொடர்ந்து நடக்கிறது. இதனால், குழந்தைகளுக்கு அதிக வேலை இருக்கிறது. எதற்காக சின்னக் குழந்தைகள் இந்த அதிக வேலையை எதிர்கொள்ள வேண்டும்? … என்ன செய்வது மோடி ஐயா? வணக்கம். இவ்வாறு அந்த சிறுமி கூறியிருந்தார்.
ஒன்லைன் வகுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் 6 வயது சிறுமி புகார் அளித்ததன் அடிப்படையில் அங்கு ஒன்லைன் வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தொடக்கக்கல்விக்கு முந்தைய வகுப்பு மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரமும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றரை மணி நேரமும் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரத்துக்கு மிகாமலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.