கொரானா நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் நிவாரண நிதியை பிரபல சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அளித்துள்ளார்.
கொரானாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இருந்தப்போதிலும் இறப்பு எண்ணிக்கை கொஞ்சமும் குறைந்தபாடில்லை. கொரானாவின் கொடூரத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த இரண்டு வாரமாக ஊரடங்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேநேரம் கொரானாவிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளால் நிதிச்சுமை அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்கும் வகையில் தாராளமாக கொரானா நிவாரணத்திற்கு நிதியளிக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டது.
அந்த வகையில் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்சின் உரிமையாளர் ஐசரி கணேஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து 1 கோடி ரூபாய் நிதியை வழங்கினார். இந்த நிகழ்வின்போது ஐசரி கணேசனின் மனைவி ஆர்த்தி கணேஷ், மகள் ப்ரீத்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.