கொரோனா நோயாளி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், டாக்டரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஅசாம் மாநிலத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், சிகிச்சை அளித்த மருத்துவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமின், ஹோஜாய் நகரில் உள்ள உதலி மாடல் மருத்துவமனையில், கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ஆத்திரத்தில் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.
இதனால், மருத்துவமனை ஊழியர்கள் அவசரம் அவசரமாக மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். டாக்டர் சேனாபதி என்பவர், ஓர் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டார். ஆனால், அந்த கும்பல் கதவை உடைத்து டாக்டரை கொடூரமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த டாக்டர், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
டாக்டர் சேனாபதி தாக்கப்பட்ட போது எடுத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த நிலைமையா என, சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
Brutality against a Doctor post MBBS , rural posting is highly condemable . I demand an impartial inquiry and Strict action against those culprit. pic.twitter.com/dduekwvDih
— Dr Numal Momin MD. (@DrNumal) June 1, 2021
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து 24 பேரை கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அசாம் மருத்துவ சேவை சங்கம் வலியுறுத்தி உள்ளது. மேலும், சங்க உறுப்பினர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் புறநகர் சிகிச்சை பிரிவு சேவையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை பிரிவு, கொரோனா வார்டுகளில் மட்டும் வேலை செய்தனர். அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.