கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 11 நாட்டினருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை சவுதி அரேபியா நேற்று விலக்கிக் கொண்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடப்பாண்டு தொடக்கம் முதலே கொரோனா 2-ம் அலை வேகமெடுக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா, பாகிஸ்தான், அர்ஜென்டினா, பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சவுதி அரேபியா வருவதற்கு அந்நாடு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதித்தது.
இந்நிலையில், அவற்றில் பல நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், அயர்லாந்து, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்வீடன், பிரான்ஸ், ஜப்பான், ஸ்விட்சர்லாந்து ஆகிய 11 நாட்டினருக்கான பயணத் தடையை சவுதி அரேபியா நேற்று நீக்கியது. எனினும், இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள், தங்கள் சொந்த செலவில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் கொரோனா பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ வந்தால் மட்டுமே அவர்கள் நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்தியா, பாகிஸ் தான் உட்பட 9 நாட்டினருக்கான பயண தடை தொடர்கிறது.