தன்னுடைய வாழ்க்கையை மாற்றிய போட்டி குறித்து ரவீந்திர ஜடேஜா பேசியுள்ளார்.
இந்திய அணியின் வலிமைமிகு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தற்போதுள்ள இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்து வருகிறார்கள். அந்த அளவுக்கு அவரின் ஆட்டமும் அற்புதமாக இருக்கிறது. ஆனால், 2018ஆம் ஆண்டு இவருக்கு இப்படி அமையவில்லை. தொடர்ந்து மோசமான பௌலிங், பேட்டிங்கிலும் சொதப்பல். இதனால், XI அணியில் இடம் பிடிக்க முடியாமல் திணறி வந்தார். இதனால் கடும் விரக்தியில் இருந்த ஜடேஜா, அணியில் இடம்பிடிக்கக் கடுமையாகப் பயிற்சி செய்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி தற்போது அணியில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த ஜடேஜாவிடம், 2018ஆம் ஆண்டில் உங்களுக்கு இந்திய ஒருநாள், டெஸ்ட் அணிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது சிறப்பாக விளையாடி வருகிறீர்கள். மீண்டும் அணிக்குள் இணைந்தது எப்படி? எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜடேஜா, “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், 2018ஆம் ஆண்டு எனக்குச் சோதனையான வருசம் தான். கிட்டதட்ட ஒரு ஆண்டுக்கு மேல் என்னால் தூங்கக் கூட முடியவில்லை. 4-5 மணி வரை விளித்திருந்து, மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து யோசித்துக்கொண்டிருப்பேன்.”
“படுத்த நிலையில்தான் இருப்பேன். ஆனால் தூக்கம் வராது. அந்த காலகட்டத்தில் டெஸ்ட், ஒருநாள் அணிகளில் இடம்பெற்றாலும், XI அணியில் வாய்ப்பு கிடைக்காது. இதனால், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க முடியால்போனது. இந்திய அணியில் எனது திறமையை நிரூபிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை.
கேள்வி: 2018ஆம் ஆண்டு கடையில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 160/6 எனத் திணறிக்கொண்டிருந்தபோது, நீங்கள் 86 ரன்கள் அடித்து அசத்தினீர்கள். அப்போட்டி முடிந்தபிறகு பேசிய ரவி சாஸ்திரி, ஜடேஜா தான் ஒரு ஆல்-ரவுண்டர் என நிரூபித்துவிட்டார். அவரால் எங்கு வேண்டுமானாலும் விளையாட முடியும் எனத் தெரிவித்திருந்தார். அப்போது எப்படி உணர்ந்தீர்கள்?
அந்த ஒரு போட்டிதான் என் வாழ்க்கையை மாற்றியது. அதுவரை வாய்ப்பு கிடைக்காமல், பார்மை இழந்து காணப்பட்டேன். அப்போட்டியில் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உறுதியான மனநிலையில் இருந்தேன். இதனால்தான் அப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட முடிந்தது. தொடர்ந்து
உலகக் கோப்பை தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டேன். ஹார்திக் பாண்டியா காயத்தால் அவதிப்பட்டதால் ஒருநாள் போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. தற்போது மூன்றுவிதமான கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன்” எனத் தெரிவித்தார்.