கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாம் மாஸ்க் அணிகிறோம். நீண்ட நேரம் மாஸ்க் அணிந்து இருப்பதால், சில பக்கவிளைவுகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். அந்த பக்கவிளைவுகளில் மிகவும் முக்கியமானது முகப்பரு ஆகும். மாஸ்க் அணிவதால் ஏற்படும் முகப்பருவுக்கு, maskne என்றும் அவர்கள் பெயர் சூட்டி உள்ளனர்.
மாஸ்க் பயன்பாடு
கொரோனா தொற்று பரவல், இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் மக்களின் வாழ்க்கை முறையில் பெருமளவிலான மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்றில் இருந்து நாம் நம்மை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சமூக இடைவெளி அல்லது தனிநபர் இடைவெளி எல்லா இடங்களிலும் போதிய அளவில் நடைமுறைப்படுத்த முடியாமல் உள்ளதால், இன்றைய நிலையில், நமது உடலை மறைக்கும் ஒருவித உடையாக மாஸ்க் மாறி உள்ளது.
பொது இடங்களில் மாஸ்க் இல்லாமல் செல்வது, நாமே ஆபத்தை தேடிக்கொள்வது போன்றது ஆகும். பல அடுக்குகள் கொண்ட மாஸ்கை அணிவதன் மூலம், நாம் தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க நாம் நீண்ட நேரம் மாஸ்க்கை அணிந்து கொள்கிறோம். இதுன்காரணமாக, maskne பிரச்சினை என்பது, அடிக்கடி ஏற்படும் பிரச்சினையாக மாறிவிட்டது. maskne முதல் பாதிப்பு, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கண்டறியப்பட்டது. இது சாதாரண முகப்பருக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது ஆகும்.
சருமம் – மாஸ்க்
Acne mechanica, rosacea, contact dermatitis, folliculitis உள்ளிட்ட சருமம் தொடர்பான பிரச்சினைகளுக்கு maskne ஒரு நிழற்குடையாக அமைகிறது என்றே சொல்ல வேண்டும். மாஸ்க்கை நீண்ட நேரம் முகத்தில் அணிவதால், வியர்வை உருவாகி அது முகத்தில் குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தி விடுகிறது. இந்த வியர்வை, சருமத்தில் உராய்வை ஏற்படுத்தி முகத்தில் உள்ள சிறிய மயிர்க்கால்களில் அரிப்பை ஏற்படுத்துகிறது. இதனையடுத்து அது வீக்கமாக மாறுகிறது. மேலும் முகத்தில் உள்ள துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி Acne mechanica என்ற பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
சாதாரணமாக முகப்பரு சிகிச்சைகளின் மூலமே இதை குணப்படுத்திவிட முடியும். சருமம் காய்ந்து போவதை தடுக்கும் மாய்ஸ்சுரைசர்களை தொடர்ந்து பயன்படுத்தி முகப்பருவை தடுக்கும் கிரீம்களை உபயோகிக்கலாம். வேதிப்பொருட்களை கொண்டு, முகப்பரு உரித்தல் சோதனையை, வாரத்திற்கு ஒருமுறைக்கு மேல் மேற்கொள்ளக் கூடாது.
Rosacea குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள், மாஸ்க் வழக்கமான அளவைவிட சிறிது விரிவடைந்து இருப்பதை நாம் கண்கூடாக காண முடியும். முகத்தில் நீண்ட நேரம் மாஸ்க் அணிவதால், அங்கு தோன்று அதிக வெப்பநிலையால், தோலில் உள்ள தந்துகிகள் நீர்ச்சத்து இல்லாமல் நீர்த்துபோகும் நிலை ஏற்படும். இது Rosacea நிலையை மேலும் அதிகரிக்கும். இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் சாதாரண மாஸ்க்குகளுக்கு உள்ளே காட்டன் மாஸ்க்கை அணிய வேண்டும். நறுமணம் இல்லாத மாஸ்க்கை பயன்படுத்துதல் நல்லது. சன் ஸ்கிரீன் கிரீம் மற்றும் மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தி, முகத்தில் ஏற்படும் அதிக வெப்பநிலையில் இருந்து சருமத்தை குளிர்விக்கலாம்.
தொடர்பு தோல் அழற்சி
அதிக சென்சிட்டிவ் ஆன தோல்களில், அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களின் மூலம், இந்த தொடர்பு தோல் அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த பாதிப்பில் இருந்து தவிர்க்க தாங்கள் பயன்படுத்தும் சாதாரண மாஸ்க்குகளுக்கு உள்ளே காட்டன் மாஸ்க்கை அணிய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பாதிப்பின் காரணமாக ஏற்படும் வீக்கத்தை குறைக்க, ஸ்டீராய்டு கிரீம்களை பெரும்பாலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Folliculitis என்பது மயிர்க்கால்களில் ஏற்படும் தொற்று ஆகும். பெரும்பாலும் இந்த பாதிப்பு ஆண்களுக்கே ஏற்படுகிறது. அவர்களின் தாடிப்பகுதியில் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. தாடிப்பகுதியில் உள்ள முடியானது பேப்ரிக் உடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது, சர்ஜிகல் மாஸ்க்கை அணிவது உள்ளிட்ட காரணங்களினால், Folliculitis ஏற்படுகிறது. இந்த பாதிப்பில் இருந்து விடுபட, ஆன்டிபயாடிக் கிரீம்களை பயன்படுத்தலாம். அதிக நூல் எண்ணிக்கை கொண்ட மென்மையான துணியால் ஆன மாஸ்க்குகளை நாம் பயன்படுத்தலாம்.
கவனிக்க வேண்டியவை
காலை, இரவு மற்றும் ஒவ்வொரு முறை மாஸ்க்கை கழட்டிய பிறகு என தினமும் 3 முறை, முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அப்போது முகத்தை தேய்த்து கழுவாமல், சருமத்தை தட்டுவதன் மூலம், சருமத்தின் உலர்தன்மையை பாதுகாக்கலாம். தோலின் தன்மையை பாதுகாக்க மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தலாம். மாய்ஸ்சுரைசர்கள் பயன்படுத்துபவர்கள், சருமத்தில் உள்ள துளைகளை அடைக்காதவைகளாக இருத்தல் வேண்டும்.
மாய்ச்சரைஸர்
எண்ணெய் சருமம் அல்லது அதுபோன்ற சருமங்களை கொண்டவர்கள், நீரை அடிப்படையாக கொண்ட ஜெல் வகையிலான மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்த வேண்டும். இவைகள், எண்ணெய் கலப்பின்றி இருக்க வேண்டும். வறண்ட சருமம் கொண்டவர்கள், செராமைட்களை பகுதிப் பொருட்களாக கொண்ட கிரீம் வகையிலான மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்த வேண்டும். சாதாரண சருமம் கொண்டவர்கள், லோஷன் வகையிலான மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்த வேண்டும். சன் ஸ்கிரீன் கிரீம் பயன்படுத்துவது, சரும பராமரிப்பின் முக்கிய படி ஆகும். இந்தியர்கள், தங்கள் சரும பராமரிப்பிற்கு, SPF 30 வகையிலான சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்துதல் அவசியம் ஆகும்.
மாஸ்க்குகள் நமது சருமத்திற்கு SPF7 அளவிற்கே நிவாரணம் தருவதால், நாம் அதற்கான சரியான சன் ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகிறது. எண்ணெய் சருமம் அல்லது அதுபோன்ற சருமங்களை கொண்டவர்கள், ஜெல் அல்லது சிலிகானை அடிப்படையாக கொண்ட சன் ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்தலாம். சாதாரண சருமம் கொண்டவர்கள், லோஷன் வகையிலான சன் ஸ்கிரீன் கிரீம்களையும், வறண்ட சருமம் கொண்டவர்கள், லோஷன் அல்லது கிரீம் வகையிலான சன் ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போதைய நவநாகரீக பெண்களுக்கு மேக்அப் என்பது அத்தியாவசியமாக மாறி உள்ளதால், அலர்ஜி ஏற்படுத்தாத வகையிலான மேக்அப் பொருட்களை பயன்படுத்துதல் மிகவும் அவசியம் ஆகும்.
தூய்மைப்படுத்துதல்
பல முறை பயன்படுத்தும் வகையிலான மாஸ்க்குகளை பயன்படுத்துபவர்கள், ஒவ்வொரு உபயோகத்திற்கு பிறகும் சோப்பை கொண்டு நன்றாக துவைக்க வேண்டும். நாம் முகத்தில் அணியும் மாஸ்க் சரியான அளவினதாக இருக்க வேண்டும். இது 3 அடுக்குகள் கொண்டதாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும்.
நாம் பயன்படுத்தும் மாஸ்க், நமது முகத்திற்கு சரியான அளவில் இல்லை என்றால், மற்றவர்களிடம் இருந்து தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. நைலான், ரேயான் போன்ற செயற்கை இழைகளால் ஆன மாஸ்க்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
செயற்கை இழைகளினால் ஆன மாஸ்க்குகள், நமது சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள், காட்டன் போன்ற மெல்லிய துணிகளால் ஆன மாஸ்க்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நேர இடைவெளி
ஒவ்வொரு மணிநேர மாஸ்க் பயன்பாட்டிற்கு பிறகும், குறைந்தது 15 நிமிடங்களாவது, மாஸ்க்கை கழட்ட வேண்டும். இதன்மூலம் முகத்திற்கு தேவையான காற்றோட்டம் கிடைக்கும் என்று தி அமெரிக்கன் அகாடமி ஆப் டெர்மடாலஜி அசோசியேசன் தெரிவித்து உள்ளது. சமூக இடைவெளி அல்லது தனிநபர் இடைவெளி நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும். மாஸ்க்கை கழட்டிய பிறகு, கைகளை நீரால் நன்கு கழுவ வேண்டும்.
தனிமைப்படுத்திக் கொள்ளுதல்
கொரோனா தொற்றில் இருந்து நாம் நம்மை காத்துக்கொள்ள தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மிகவும் அவசியம் ஆகும். சமூக இடைவெளி அல்லது தனிநபர் இடைவெளி எல்லா இடங்களிலும் கடைப்பிடிக்க முடியாத இடங்களில், மாஸ்க் அணிதல் மற்றும் சானிடைசர் பயன்படுத்துவது மிகவும் அத்தியாவசியம் ஆகிறது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க, முகம் மற்றும் மூக்குப்பகுதியை நன்றாக மூடி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.