சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் எவ்வளவு எம் மக்களிற்கு கிடைக்குமென தெரியாது. இலங்கை அரசாங்கமும் இந்திய மத்திய அரசிடம் அவசரகோரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் தடுப்பு ஊசிகள் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள தடுப்பூசி பற்றாக்குறையை இந்தியா நிவர்த்தி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்ளேவிற்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வகையில் அதிகளவிலான கொவிட் -19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் கொவிட் தடுப்பு ஊசிகள் மிக அவசரமாக எமது வடகிழக்கு மக்களுக்கு தேவையாக உள்ளது. இவ் ஆபத்தான நிலமைபற்றி யாழ் இந்தியத் துணை தூதரகமும் நன்றாக அறிந்திருக்கும்.
இந்நிலையில் இலங்கை அரசால் தருவிக்கப்பட உள்ள சீன தடுப்பு ஊசிகளில் எவ்வளவு எம்மக்களுக்கு கிடைக்கும் என்று தெரியாது. இலங்கை அரசாங்கமும் இந்திய மத்திய அரசிடம் அவசரகோரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் தடுப்பு ஊசிகள் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமைபற்றியும் நாம் அவதானித்துள்ளோம். எனினும் வடக்கு கிழக்கு வாழ் மக்கள் எதிர்கொள்ளும் இவ் ஆபத்தான நிலைமையில் இந்திய அரசின் சாத்தியமானளவு உதவிகளை பற்றாக்குறையாக உள்ள தடுப்பு ஊசிகள் சம்பந்தமாக எதிர்பார்த்துள்ளார்கள்.
தங்களிடமிருந்து சாதகமான பதிலை நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.




