பால்கி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார்.
இந்தித் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பால்கி. இவர் இயக்கத்தில் உருவான படங்கள் அனைத்துக்குமே ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் பி.சி.ஸ்ரீராம். அதேபோல் பால்கி இயக்கத்தில் வெளியான ‘பேட் மேன்’ படம் தவிர்த்து, மீதி அனைத்துப் படங்களுக்குமே இளையராஜாதான் இசை.
2018-ம் ஆண்டு அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘பேட் மேன்’ படத்துக்குப் பிறகு, தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வந்தார் பால்கி. கொரோனா அச்சுறுத்தலால் இவரது இயக்கத்தில் தொடங்கப்படவிருந்த படம் தள்ளிக்கொண்டே போனது.
தற்போது பால்கியின் அடுத்த படத்தின் தகவலை வெளியிட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் பால்கி. அதற்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரியவுள்ளார் பி.சி.ஸ்ரீராம். யார் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் விவரங்கள் எதையுமே பி.சி.ஸ்ரீராம் வெளியிடவில்லை.
இது உளவியல் சார் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.