டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஸ்புட்னிக் வி உற்பத்தியாளர்கள் கொரோனா தடுப்பூசியை டெல்லிக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்பூட்னிக் வி ஒரு ரஷ்ய கொரோனா தடுப்பூசியாகும். இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரான டி.ஜி.சி.ஐ இந்தியாவில் மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த மூன்று தடுப்பூசிகளில் இதுவும் ஒன்றாகும். மற்ற இரண்டு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், எவ்வளவு டோஸ் வாங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கெஜ்ரிவால் கூறினார். “ஸ்புட்னிக் வி தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அவர்கள் எங்களுக்கு தடுப்பூசி கொடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அளவு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எங்கள் அதிகாரிகளும் தடுப்பூசி உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளும் நேற்று சந்தித்தனர்.” என்று அவர் கூறினார்.
துவாரகாவின் வேகாஸ் மாலில் டெல்லியின் முதல் நடமாடும் தடுப்பூசி மையத்தை அறிமுகப்படுத்தியபோது, நகரத்தில் 18-44 குழுக்களுக்கு தடுப்பூசி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது 45+ வகை மக்களுக்கு மட்டுமே டோஸ் வழங்கப்படுவதாகவும் கூறினார். டெல்லிக்கு அதன் மொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட 80 லட்சம் டோஸ்கள் தேவை என்றும், மாநிலங்களுக்கு வழங்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
டெல்லி மற்றும் பல மாநிலங்கள் தடுப்பூசிகளை வாங்குவதற்காக உலகளாவிய டெண்டரை வெளியிட்டுள்ளன. இந்த வார தொடக்கத்தில் கெஜ்ரிவால், ஃபைசர் மற்றும் மாடெர்னா தடுப்பூசிகளை விற்பனை செய்வதற்கான கோரிக்கையை நிராகரித்ததாகவும், அவர்கள் இந்திய அரசாங்கத்துடன் மட்டுமே வர்த்தகம் செய்வோம் எனக் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.
மாடெர்னா மற்றும் ஃபைசர் தயாரிக்கும் தடுப்பூசிகள் இரண்டும் குழந்தைகளுக்கு ஏற்றது என்றும், “குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு இந்த தடுப்பூசிகளை வாங்க வேண்டும்” என்றும் முதல்வர் கூறினார்.
நகரத்தில் சுமார் 620 கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் பாதிப்புகள் இருப்பதாகவும், அதன் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி ஊசி பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.a