சீனாவில் நடைபெற்ற அல்ட்ரா மரதன் போட்டியில் பருவநிலை மாற்றம் காரணமாக 21 வீரர்கள் இறந்த நிலையில் 6 பேரின் உயிரை ஆடு மேய்க்கும் ஒருவர் காப்பாற்றினார்.
சீனாவில் உள்ள கன்சூ மாகாணத்தின் பேயின் நகர் சுற்றுலா தளத்தில் கடந்த சனிக்கிழமை இயற்கையான மலைப்பகுதியில் 100 கிலோ மீட்டர் மரதன் பந்தயம் நடைபெற்றது. இதில் 172 பேர் கலந்து கொண்டனர். இந்த பந்தயம் நடைபெற்ற சமயத்தில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு உறைபனி மழை, அதிக காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் சீனாவில் துயரமாக மாறி உள்ளது. இதைத்தொடர்ந்து போட்டி அமைப்பாளர்கள் வானிலை பற்றிய எச்சரிக்கையை ஏன் புறக்கணித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 21பேர் உயிரிழந்து 4 நாட்கள் ஆனநிலையில் தற்போது இந்த நிகழ்வில் இருந்து 6 பேரை உயிருடன், ஆடு மேய்ப்பவர் ஒருவர் காப்பாற்றி உள்ளது தெரியவந்துள்ளது.
ஜு கெமிங் என்பவர் கடந்த சனிக்கிழமை மலைப்குதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது மதிய உணவு இடைவேளை நேரத்தில் வெப்ப நிலை குறைந்து அதிக காற்றுடன் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இதையடுத்து ஜு கெமிங் அவசரகாலங்களில் உணவு, துணிகளை சேமித்து வைக்கும் குகைக்குள் தஞ்சம் அடைந்தார். அப்போது குகைக்கு வெளியே சிறிது தூரத்தில் மரதன் போட்டியில் பங்கேற்ற வீரர் ஒருவர் அசையாமல் அப்படியே நின்றிருப்பதை பார்த்துள்ளார்.
உடனடியாக விரைந்து சென்ற அவர், அந்த வீரரை மீட்டு குகைக்குள் தூக்கிச் சென்றார். பின்னர் அவரது உறைந்த கைகளையும், கால்களையும் மசாஜ் செய்து, நெருப்பு மூட்டி துணிகளை உலர்த்தினார். இதன் பின்னரே அந்த வீரர் சகஜ நிலைக்கு திரும்பினார். தொடர்ந்து மேலும் 4 வீரர்களை மீட்டு குகைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கும் உதவினார். இதில் சிலர் மயக்க நிலையில் இருந்தனர்.
மீண்டும் ஒரு முறை ஜு கெமிங் குகைக்கு வெளியே சென்று பார்த்த போது வீரர் ஒருவர், ஆலங்கட்டி மற்றும் உறை பனி மழையால் மயங்கி கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை குகைக்கு அழைத்து வந்து போர்வைகள் வழங்கி அவரது உயிரை காப்பாற்றினார்.
ஜு கெமிங்கால் காப்பாற்றப்பட்ட வீரரான ஜாங் சியாவோடோ,வெய்போ என்ற சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,“என்னைக் காப்பாற்றிய மனிதருக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். அவர் இல்லாவிட்டால் நான் அங்கேயே விடப்பட்டிருப்பேன்’’ என்றார்.
ஜு கெமிங் 3 ஆண்கள், 3 பெண்களை காப்பாற்றியுள்ளார். தனது தன்னலமற்ற செயலால் சீனாவில் அவர், பாராட்டப்பட்டு வருகிறார். ஆனால் தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு உதவ முடியாமல் போனது வருத்தமாக இருப்பதாக ஜு கெமிங் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர்கூறும்போது, “சாதாரண காரியத்தை செய்த சாதாரண மனிதன் தான் நான். என்னால் காப்பாற்ற முடியாத சிலரும் இருந்தனர். 2 ஆண்கள் உயிரற்ற நிலையில் இருந்தனர். அவர்களுக்காக என்னால் எதுவும் செய்ய முடிய வில்லை. என்னை மன்னிக்கவும்” என்றார். – ஏஎப்பி