கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நடிகர் காளி வெங்கட், அது குறித்த அனுபவங்களை வீடியோவாக பதிவு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவால் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர். இந்நிலையில் தானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிக்கலான நிலையில் இருந்ததாக பிரபல நடிகர் காளி வெங்கட் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த துணை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் குணச்சித்திர நடிகரான காளி வெங்கட் இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்கள் பலருடன் சின்ன கதாபாத்திரங்களில் இணைந்தும் நடித்துள்ளார். அண்மையில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்திலும் நடித்திருந்தார் காளி வெங்கட். இந்நிலையில் தான் கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் காளி வெங்கட்.
அதில், இந்த வீடியோவை வெளியிடலாமா வேண்டாமா என்று யோசித்தேன். இது ஒரு விழிப்புணர்வு வீடியோ மாதிரி தான்.
ரமேஷ் திலக் திட்டியதால் என் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். 21 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தேன். ஆக்ஸிஜன் லெவல் ரொம்ப கம்மியா இருந்ததால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக சொன்னாங்க.
இருமல், மூச்சுத் திணறல் எல்லாமே அறிகுறிகளும் இருந்தது. கொஞ்சம் சிக்கலான நிலையில் இருந்ததால உடனே அட்மிட் ஆகனும்னு சொன்னாங்க. சரி அட்மிட் ஆகலாம்ன்னு முடிவு பண்ணி ஹாஸ்பிட்டல் போன வழக்கம் போல அங்க இடமில்லை. போன மாசம்தான் இது நடந்தது. நான் இதுல இருந்து வென்றே தீருவேன்னு என்றெல்லாம் நினைக்கல. வந்துருச்சு அடுத்த என்ன பண்ணலாம்ன்னு தான் இருந்தேன்.
டாக்டர் முருகேஷ் பாபுதான் ரொம்ப உதவியா இருந்தாரு. அவரோட அட்வைஸ் கேட்டு தான் நான் நடந்துகிட்டேன். கொரோனா வராம பார்த்துக்குறதுதான் முக்கியம். பதற்றமாக கூடாதுனு சொல்றாங்க. அதானல வராம பாதுகாத்துக்குங்க, பத்திரமா இருங்க, வந்துடுச்சுன்னாலும் அலட்சியமா இருக்காதீங்க. தைரியமா இருங்க. முக்கியமா எந்த அறிகுறி தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி , அவர் சொல்றத கேளுங்க என நடிகர் காளி வெங்கட் தனது வீடியோவில் கூறியுள்ளார்.