கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயின் தாக்கத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பலவிதமான முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பொது வெளியில் தேவையின்றி மக்கள் நடமாடுவதை தடுக்க, இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவித்துள்ளது தமிழக அரசு.
தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக திரைத்துறை பிரபலங்கள் தெரிவிப்பதும், வீட்டிலே தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவிப்பதும் வாடிக்கையாகி உள்ளது. திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்களும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்ட புகைப்படத்தை பொது வெளியில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் வளர்ந்து வரும் இளம் நடிகரான அசோக் செல்வன், தான் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் இளம் நடிகராகவும் தற்போது தயாரிப்பாளராகவும் உள்ள அசோக் செல்வன் தனது அடுத்த படமான ஹாஸ்டல் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு இவரின் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி கடவுளாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தமிழைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மரக்கார் என்ற சரித்திர திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட அசோக் செல்வன், அது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீண்டகாலமாகவே தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றிய பல்வேறு சந்தேகங்களும் தயக்கங்களும் மற்றவர்களைப் போல என்னிடம் இருந்தது. தற்போது உரிய மருத்துவர்களிடமும் அது சம்பந்தப்பட்ட துறையினரிடமும் பலமுறை ஆலோசனை செய்து இந்த கொடுமையான கொரோனா சங்கிலியை உடைக்க வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முடிவெடுத்து தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளேன். கொரோனா விஷயத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மிகச் சரியான பாதையை நோக்கி செல்கிறோம் என்பதில் நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.