கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பில் குளறுபடிகள் இடம்பெறுள்ளதாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பில் இரு வேறு விசாரணைகள் நடத்தப்படுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
வாக்கெண்ணும் போது குளறுபடிகள் இடம்பெற்றதாக நேற்று சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டியது.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது, மூன்றிலிரண்டு பெரும்பான்மை, அரசாங்கத்துக்கு கிடைத்தது. எனினும், வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை. அதுதொடர்பில் முறைபாடு செய்யப்படும் என்றும் முன்னணி அறிவித்தது.
ஆளும் தரப்பைச் சேர்ந்த ஏ.எம்.யூ அலி சப்ரி, ஜயரத்ன ஹேரத் ஆகிய இருவரும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனினும், அவ்விருவரின் வாக்குகளும் எண்ணப்படவில்லை என முன்னணி குற்றஞ்சுமத்தியுள்ளது.
இந்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன என அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது, ஆதரவாக 149 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன என அறிவிக்கப்பட்டது.