பூமியில் நரகம் உள்ளது என்றால் அது காசாதான் என்று கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 200க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். பலியானவர்களில் 60 பேர் சிறுவர், சிறுமிகள்.இதுகுறித்து அன்டோனியா குட்டரெஸ் கூறும்போது, ‘‘காசாவில் நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. பூமியில் நரகம் உள்ளது என்றால் அது குழந்தைகள் வாழும் காசாதான். இஸ்ரேலுக்கும் ஹமாஸ்க்கும் இடையேயான சண்டைகள் நிறுத்தப்பட வேண்டும். காசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான நடவடிக்கைகள் ஐ.நா. சார்பாக நடைபெற அனுமதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
அவ்வாறே இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பு நடத்தும் தாக்குதலையும் அவர் விமர்சித்தார்.இஸ்லாமியர்களும் யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதலை நடத்தின.
மே 10-ம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மற்றும் மேற்குக் கரை பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.