கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பபட்டார்.
தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் கொரோனா மேல் சிகிச்சைக்காக அவரை மருத்துவ பணியாளர்கள் அழைத்துச் சென்றனர்.இந்தசூழலில், ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, வாகனத்தில் திடீரென தீப்பிடித்தது. தீப்பிடிப்பதற்கு சற்று நேரம் முன்பு தான் நோயாளி ஆம்புலன்சில் இருந்து வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் வாகனத்தின் அருகே யாரும் இல்லை.
இதனிடையே தீவிபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆம்புலன்சில் பிடித்திருந்த தீயை அணைத்தனர்.
ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பொழுது அங்கிருந்த வாலிபர் ஒருவர் எரிந்துகொண்டிருக்கும் வாகனத்தின் முன்பு நின்று செல்பி எடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் எரியும் வாகனத்திற்கு முன்பு செல்பி எடுக்கும் அந்த வாலிபரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
செல்பி மோகத்தால் ஆபத்தை உணராமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு பல இளைஞர்கள் உயிரை இழந்துள்ள சூழலில், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.