கள் விற்பனை நிலையங்களை நிபந்தனையுடன் திறப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் க. இராசதுரை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள் பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு அமைவாக அங்கிருந்து மாவட்டச் செயலாளருக்கு வழங்கப்பட்ட அறிவித்தலுக்கமைவாக மாவட்டச் செயலாளர் ஊடாக கள்ளுக் கடைகளை திறப்பதற்கு அனுமதி இன்று(20) எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ளது.
உற்பத்தி செய்யப்படுகின்ற கள்ளை போத்தலில் அடைத்து அல்லது ஏற்கனவே போத்தலில் கள்ளை விற்பனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வறித்தல் வடக்கு மாகாணம் முழுவதற்கும் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கடந்த 07.05.2021 அன்று முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் அவர்கள் பிரதமர் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
குறித்த கடிதத்தில் கள் உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்கள் மிகவும் வறுமைக் கோட்டிற்குள் வாழ்கின்ற குடும்பங்களைச் சேசர்ந்தவர்கள். எனவே அவர்களின் வாழ்வாதாரம் கருதி நுகர்வோர்கள் விற்பனை நிலையங்களில் வைத்து அருந்துவதனை
தடுத்து கொள்வனவு செய்து செல்வதற்கும், களஞ்சியத்தில் உள்ள போத்தலில் அடைக்கப்பட்ட கள் அல்லது புதிதாக உற்பத்தி செய்கின்ற கள்ளை போத்தலில் அடைத்து விற்பனை செய்யும், நடைமுறைகளுக்கு அமைவாக திறப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.




