கொரோனாவால் மருத்துவர்களே உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில், மருத்துவர்களை பாதுகாப்பதில் மகாராஷ்டிர அரசு அக்கறை காட்டுவதில்லை என
மும்பை உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும், மருத்துவர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் தகவல் வழங்கும்படி மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மாநில அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து நடைபெற்ற விசாரணையின்போது, “ஒரு பக்க பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு வழக்கறிஞரால் சரிபார்க்கப்படாத பிரமாண பத்திரங்கள் இனி ஏற்கப்படாது.
இது மிகவும் மோசமான நடவடிக்கை. மருத்துவர்களை பாதுகாக்க அரசு தீவிர அக்கறை காட்டவில்லை என தெரிகிறது. ஆனால், மருத்துவர்கள் முழு உழைப்பையும் வழங்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்” என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அடுத்த வாரத்துக்குள் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி மாநில சுகாதாரத் துறை துணைச் செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.