டைட்டானிக் கப்பல் கடலில் முழ்கியது பற்றி நாம் அனைவருக்கும் தெரியும் அதே போல பல கப்பலகள் நீரில் முழ்கியுள்ளன. கடல் குறித்து பெரியதாக அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாத காலம் என்பதால் அன்று இது மிக அதிகமாக நடந்தது. ஒரு நபர் ஒரு கப்பல் விபத்திலிருந்து தப்பினாலே பெரிய அதிர்ஷ்டசாலி தான். ஆனால் ஒரு பெண் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று கப்பல் விபத்துக்களில் சிக்கியுள்ளார். அத்தனையிலிருந்து அவர் உயிர் தப்பியுள்ளார். அந்த பெண் பற்றி தான் இந்த பதிவில் முழுமையாக பார்க்கப்போகிறோம்.
1887ம் ஆண்டு அர்ஜெண்டினாவின் பெஹா பிளாங்கா என்ற பகுதியில் வாழ்ந்த கேத்ரின் ஜெசப் ஆகிய தம்பதிக்குச் சரியாக அக்டோபர் 2ம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அவர்கள் வயலெட் கான்ஸ்டென்ஸ் ஜெசப் எனப் பெயர் வைத்தனர். அதன் பின் இந்த தம்பதி 9 குழந்தைகளைப் பெற்றெடுத்தனர் அதில் 6 பேர் மட்டுமே உயிர் பிழைத்து வளர்ந்தனர். ஜெசப் தனது இளமைக் காலத்தில் தனது சகோதர சகோதரிகளைக் கவனிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் அவருக்குச் சிறு வயதில் டிபி நோய் வந்தது. அப்பொழுது டாக்டர்கள் தீவிர முயற்சியால் வயலெட் டிபி நோயிலிருந்து தப்பினார். இந்நிலையில் ஜெசப் 16 வயதாக இருக்கும் போது அவரது தந்தை ஒரு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்துவிட்டார். பின்னர் அவரது குடும்பம் பிழைப்பு தேடி இங்கிலாந்திற்குக் குடி பெயர்ந்தது.
இங்கிலாந்திற்கு தன் குழந்தைகளுடன் வந்த கேத்ரின் அவர்களைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். பின்பு தன் குடும்ப வருமானத்திற்காக கேத்ரின் ஒரு வேலையைத் தேட துவங்கினார். அவருக்கு ஸ்டுவடிரஸ் பணி கிடைத்தது. ஸ்டுவாடிரஸ் என்றால் கப்பலில் செல்லும் பயணிகளுக்கு பணிவிடை செய்யும் பெண்கள் என அர்த்தம். விமானத்தில் ஏர் ஹோஸ்டிரஸ் இருக்கிறார்களே இது போலக் கப்பலில் பணியாற்றுபவர்களுக்குப் பெயர் தான் ஸ்டுவடிரஸ்.
இந்நிலையில் ஒரு கட்டத்தில் கேத்ரினிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அதனால் அவர் பணியைத் தொடர முடியவில்லை. ஆனால் வீட்டிற்கு வருமானம் தேவைப்பட்டதால் வயலெட் தன் படிப்பை விட்டு விட்டு வேலைக்குச் செல்லும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். படித்துக்கூட முடிக்காத வயலெட்டிற்கு என்ன வேலை செய்வது என்று தெரியவில்லை. பின்னர் தான் தாயின் வழியையே தேர்வு செய்ய முடிவு செய்தார்.
ஆர்எம்எஸ் கப்பல் நிறுவனம்
தன் தாயைப் போலக் கப்பலில் ஸ்டுவடிரஸ் பணியைச் செய்ய எண்ணிப் பல கப்பல் நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்தார். கப்பலில் நிறுவனங்கள் இவரை நேர்முக தேர்வு செய்த போது இவர் பார்க்க அழகாக இல்லை. அழகாக இருக்கும் பெண்கள்தான் இந்த பணிக்குச் சரிப்பட்டுவருவார்கள் எனக் கூறி பலர் நிராகரித்தனர். ஆனால் இவரை நேர்முகத் தேர்வு செய்யும் போது ஆர்எம்ஸ் என்ற கப்பல் கட்டும் நிறுவனம் இவரது தாய் கப்பலில் பணியாற்றியதை ஒரு ப்ளஸ் பாயிண்டாக எடுத்துக்கொண்டது.
நர்ஸிங் பயிற்சி
இந்த நிறுவனமும் இவரது அழகை யோசித்தாலும் இவரை நேரடியாகப் பயணிகள் பணிவிடை பணியில் ஈடுபடுத்தாமல் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் செவிலியராக இவரை நியமிக்க முடிவு செய்து வேலைக்கு எடுத்தது. அதன்படி இவருக்கு நர்ஸிங் பயிற்சி கொடுக்கப்பட்டது. நடுக்கடலில் கப்பல் செல்லும் போது ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவரை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என் பயிற்சியையும் கப்பல் பயணம் குறித்த பயிற்சியையும் கொடுத்தது.
ராயல் மெயில் லைன்
அதன் பின் இவர் தனது 21வது வயதில் தனது ஸ்டுவடிரஸ் பணியை ராயல் மெயில் லைன் என்ற கப்பலில் 1908ம் ஆண்டு துவங்கினார். இந்த கப்பல் மட்டும் ஏற்றிச் செல்லும் கப்பலாக இருந்தாலும் அதில் உள்ள ஊழியர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்காக வயலெட் முதல் முதலில் நியமிக்கப்பட்டு தனது பணியைத் தொடர்ந்தார்.
இந்நிலையில் வயலெட் சிறப்பாக பணியாற்றியதால் அவரை பயணிகள் கப்பலில் பணியாற்ற வாய்ப்பு வழங்க அந்நிறுவனம் முயற்சி செய்தது. இந்நிலையில் 1911ம் ஆண்டு ஒயிட் ஸ்டார் வெஷல் என அழைக்கப்படும் ஆர்எம்எஸ் ஒலிம்பிக் எனப்படும் கப்பலில் இவருக்குப் பணி வழங்கப்பட்டது. இது அந்த காலத்தில் மிக அதிகமான பயணிகள் பயணிக்கும் வசதியுள்ள மிகப்பெரிய சொகுசு கப்பலாக இருந்தது.
இந்த கப்பல் தனது பயணத்தை 1911ம் ஆண்டு செப 20ம் தேதி சவுதாம்டன் துறைமுகத்திலிருந்து கிளப்பியது. இந்த கப்பல் கிளம்பி சிறிது தூரப் பயணத்திலேயே இந்த கப்பல் பிரிட்டிஷ் போர்க் கப்பலான எச்எம்எஸ் கவிக்கே என்ற கப்பலுடன் விபத்தில் சிக்கியது. இதில் கப்பலுக்குச் சேதம் ஏற்பட்டது. ஆனால் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. கப்பல் மூழ்கவில்லை. மீண்டும் துறைமுகத்திற்குத் திரும்பும் நிலையிலிருந்ததால் கப்பல் பத்திரமாகத் துறைமுகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது. அதிர்ஷ்டவசமாகக் கப்பலில் பயணித்த அனைவரும் உயிர் தப்பிவிட்டனர்.
டைட்டானிக்
இந்நிலையில் அந்த கப்பல் கட்டுமான நிறுவனம் இந்த உலகிலேயே யாராலும் உடைக்க முடியாத அதே நேரத்தில் அதிக மக்கள் பயணிக்கக்கூடிய மிகப்பெரிய கொகுசு கப்பலைக் கட்ட தீர்மானித்தது. அந்த கப்பல் தான் உலகம் முழுவதும் பிரபலமான டைட்டானிக் கப்பல். அந்த கப்பலிலும் வயலெட்டிற்கு நர்ஸ் பணியை வழங்கியது அந்நிறுவனம் இந்நிலையில் தனது 24 வயதில் டைட்டானிக் கப்பலில் புறப்படத் தயாரானார்
முழ்கிய டைட்டானிக்
1912ம் ஆண்டு ஏப் 10ம் தேதி டைட்டானிக் கப்பல் தனது பயணத்தைத் துவங்கியது. பயணம் துவங்கி 4வது நாள் அதாவது ஏப் 14ம் தேதி டைட்டானிக் அட்லாண்டிக் பெருங்கடலில் நடுக்கடலில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறையில் மோதியதில் நீரில் மூழ்கத் துவங்கியது. நிலைமையை உணர்ந்து கொண்ட வயலெட் அவருக்கு அளித்த பயிற்சியின் படி ஆங்கிலம் பேசத் தெரியாத மக்களிடம் அவசரக் காலத்தில் எப்படி அவர்களை வழி நடத்த வேண்டும் என்ற ரீதியில் வழி நடத்தி கப்பலில் உள்ள உயிர்காக்கும் படகில் மக்களை ஏற்றினார்.
படகு எண் 16 வது படகில் இவரையும் ஏற கப்பல் நிர்வாகம் அனுமதித்தது. மேலும் இவரிடம் ஒரு குழந்தையைக் கொடுத்து அந்த குழந்தையைப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு சேர்க்கும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி வயலெட்டும் மற்ற சில பயணிகளும் உயிர்காக்கும் படகில் ஏறி அமர்ந்தனர். படகு தரையில் கடலில் இறக்கப்பட்டது.
ஆர்எம்எஸ் கார்ப்பாத்தியா கப்பல்
இந்நிலையில் டைட்டானிக் கப்பல் முழுமையாக நீரில் மூழ்கியது. இவர்கள் உயிர்காக்கும் படகில் உதவிக்காகக் காத்திருந்தனர். கப்பல் மூழ்கிய செய்தியை அறிந்து ஆர்எம்எஸ் கார்ப்பாத்தியா என்ற கப்பல் உதவிக்கு வந்தது. அந்த கப்பலில் வந்தவர்கள் வயலெட் இருந்த உயிர்காக்கும் படகு எண் 16 இருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர். அவர்கள் வயலெட்டை அந்த குழந்தையின் தாயாக இருக்கும் எனக் கருதினர். பின்னர் இவர்கள் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு சேர்க்கப்பட்டனர்.
எச்எம்எச்எஸ் பிரிட்டானிக் கப்பல்
இந்நிலையில் முதல் உலகப்போர் வந்தது. இந்த காலகட்டத்தில் வயலெட் பிரிட்டிஷ் செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றினார். அப்பொழுது எச்எம்எச்எஸ் பிரிட்டானிக் என்ற கப்பல் மருத்துவ வசதிகள் பொருந்திய கப்பலாகப் போருக்காகத் தயார் செய்யப்பட்டது. இந்த கப்பல் தனது பயணத்தை 1916ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி துவங்கியது. இந்த கப்பலில் செவிலியராக வயலெட் தனது அடுத்த கடல் பயணத்தைத் துவங்கினார்.
இந்த கப்பல் புறப்பட்டு ஏகியன் கடற்பகுதியில் பயணிக்கும் போது ஏற்பட்ட ஒரு வெடிவிபத்தில் சிக்கியது. இந்த விபத்தால் கப்பல் நீரில் மூழ்கத் துவங்கியது கப்பலிலிருந்தவர்கள் உயிர் காக்கும் படகு மூலம் தப்பிக்கத் துவங்கினர். இந்த விபத்திலும் சிக்கிய வயலெட்டும் உயிர் காக்கும் படகில் தப்பித்தார். இந்த வெடிவிபத்து நடந்து 55 நிமிடங்களில் கப்பல் முழுமையாக நீரில் மூழ்கியது. இந்த கப்பலில் பயணித்த 1066 பயணிகளில் 30 பேர் பலியாகிவிட்டனர். மற்றவர்களை உயிர்காக்கும் படகிலிருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் மீட்டது.
இந்த கப்பல் எந்த விபத்தில் சிக்கியது எப்படி மூழ்கியது என்பது பெரும் புதிராகவே இருந்தது. இந்த கப்பல் மூழ்கியது குறித்துப் பல முரண்பாடான தகவல்கள் வெளியாகத் துவங்கியது. பெரும்பாலும் ஜெர்மானியர்கள் கடலில் வைத்த கன்னி வெடியில் இந்த கப்பல் சிக்கியிருக்கலாம் என்றே கருதப்பட்டது. எனினும் இதற்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் தான் பொறுப்பு எனக் கூறப்பட்டது.
எப்படியே வயலெட் இந்த விபத்திலிருந்தும் தப்பித்துவிட்டார். உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய கப்பல் விபத்துக்களின் இந்த விபத்துகள் மிக முக்கியமானவை. இந்த 3 விபத்திலும் ஒரு பெண் சிக்கி அந்த பெண் 3 விபத்திலிருந்தும் தப்பித்தார். பின்னர் வயலெட் ரெட் ஸ்டார் லைன், ராயல் மெயில் லைன் உள்ளிட்ட பல கப்பல் நிறுவனங்களில் பணியாற்றி இரண்டு முறை உலகையே சுற்றிவந்துவிட்டார்.
1950ம் ஆண்டு இவர் தன் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். அதன் பின் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. அவர் ஓய்வு பெற்ற பின் ஒரு நாள் இரவு அவருக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் ஒரு பெண் பேசினார். அந்த பெண் வயலெட்டிடம் “நீங்கள் டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது ஒரு குழந்தையைக் காப்பாற்றினீர்களா?” எனக் கேட்டுள்ளார். அதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த வயலெட் ஆம் எனக் கூறியுள்ளார். அதற்கு மறுமுனையில் பேசிய அந்த பெண் “அந்த குழந்தையே நான் தான்” எனப் பேசிவிட்டுச் சிரித்துக்கொண்டே போனை வைத்துவிட்டார்.
இந்த தகவல்கள் எல்லாம் வயலெட்டின் நண்பரும் ஜான் மேக்ஸடோன் கிரகம் என்பவர் எழுதிய புத்தகத்தின் மூலம் தான் வெளி உலகிற்குத் தெரியவந்தது. இப்படி ஒரு பெண் இருக்கிறார். அவர் 3 முறை கப்பல் விபத்துக்களில் சிக்கித் தப்பித்தவர் என்பது தெரிய வந்தது. அதற்கு முன்னர் வரை வயலெட் யாரிடமும் தன் முழு வாழ்க்கை கதையைப் பகிர்ந்தது இல்லை.
ஜான் கடல் குறித்து அதிகம் எழுதுபவர் அவர் புத்தகங்களுக்காகக் கடலில் நடந்த விபத்துக்கள் குறித்து ஆய்வு செய்த போது கப்பலிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் பட்டியலில் ஒரே பெயர் மூன்று கப்பலிருந்து உயிர் பிழைத்தவர்கள் பட்டியலிலும் இருந்தது. இது எப்படியோ ஜானின் கண்ணில் சிக்க அவர் அந்த வயலெட்டை தேடி அவரிடம் பேசிய போது தான் அத்தனை விஷயங்களும் வெளியே வந்துள்ளது.
டைட்டானிக்கிலிருந்து வயலெட் ஒரு குழந்தையுடன் வந்த நிலையில் அந்த குழந்தையின் தாயும் டைட்டானிக்கிலிருந்து காப்பாற்றப்பட்டார். கரைக்கு வந்த பின் அந்த குழந்தை உரியத் தாயிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அதன் பின் வயலெட்டிற்கும் அந்த குழந்தைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருந்தது.
வயலெட் மரணம்
இந்த சம்பவம் குறித்து யான் புத்தகவம் எழுதியதும். பலருக்கு இதுபெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பல ஊடகங்கள் வயலெட்டை பேட்டி எடுத்தனர். வயலெட் பற்றிய ஆச்சரியம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் 1971ம் ஆண்டு தனது 83வது வயதில் வயலெட் உயிரிழந்துவிட்டார்.
இந்த விஷயத்தில் தீராத மர்மம் என்னவென்றால் வயதுட் தான் அந்த குழந்தையைக் காப்பாற்றினார் என்பது யான் எழுதிய புத்தகத்திலிருந்து தான் வெளி உலகிற்குத் தெரியவந்தது. அதற்கு முன்பு யாருக்கும் இது குறித்துத் தெரியாது அப்படி என்றால் வயலெட்டிற்கு போன் செய்து அந்த குழந்தை குறித்துப் பேசியது யார்? அப்படிப் பேசியது உண்மையாகவே அந்த குழந்தையாக இருந்தாலும் அவருக்கு எப்படி வயலெட்டின் போன் நம்பர் கிடைத்தது? இவை எல்லாமே தீராத மர்மம் தான்.