காலாவதியான அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளின் கிட்டத்தட்ட 20,000 டோஸ்களை எரித்த ஆப்பிரிக்க நாடான மலாவி, உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆப்பிரிக்கா மையங்களில் இருந்து அவ்வாறு செய்யக்கூடாது என்ற அழைப்பையும் மீறி நடந்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலாவியின் தலைநகரான லிலோங்வேயில் உள்ள கமுசு மத்திய மருத்துவமனையில் தடுப்பூசிகளை எரிக்கும் நிகழ்வுக்கு மலாவியின் சுகாதார அமைச்சர் கும்பீஸ் கண்டோடோ சிப்போண்டா தலைமை தாங்கினார்.
“நாங்கள் இந்த தடுப்பூசிகளை அழித்து வருகிறோம். ஏனெனில் அரசாங்கக் கொள்கை காலாவதியான சுகாதாரப் பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படக்கூடாது என்பது தான். வரலாற்று ரீதியாக மலாவியின் விரிவாக்கப்பட்ட நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் காலாவதியான தடுப்பூசி இதுவரை பயன்படுத்தப்படவில்லை.” என்று அவர் கூறினார்.
தடுப்பூசிகளை எரிப்பதால், தடுப்பூசிகளைப் பற்றி எதிர்மறையான கருத்து உள்ளவர்கள் காலாவதியான தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது என சர்ச்சை கிளப்ப முடியாது என்று அவர் கூறினார்.
“மலாவியர்களுக்கு பொறுப்புக் கூறும் பொருட்டு நாங்கள் பகிரங்கமாக அழிக்கிறோம். காலாவதியான தடுப்பூசிகள் தடுப்பூசி இயக்கத்தின் போது பயன்படுத்தப்படவில்லை.” என்று அவர் கூறினார். “அரசாங்கத்தின் சார்பாக, காலாவதியான கொரோனா தடுப்பூசி யாருக்கும் வழங்கப்பட மாட்டாது என்று அனைத்து மலாவியர்களுக்கும் நான் உறுதியளிக்கிறேன்.” என்று மேலும் கூறினார்.
எரிந்த தடுப்பூசிகள் ஏப்ரல் 26 அன்று காலாவதியாகிய நிலையில், அவை காலாவதியாவதற்கு வெறும் 18 நாட்களுக்கு முன்னதாக மார்ச் 26 அன்று மலாவிக்கு வந்த 1,02,000 டோஸ்களில் எஞ்சியவையாகும். ஆப்பிரிக்க ஒன்றியத்தால் நன்கொடையாக அனுப்பப்பட்ட மற்ற அனைத்து மருந்துகளும் வெற்றிகரமாக நிர்வகிக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.
தடுப்பூசிகளை வழங்கிய உலக சுகாதார அமைப்பு, ஆப்பிரிக்க யூனியன் மற்றும் இந்தியாவுக்கு சுகாதார அமைச்சர் நன்றி தெரிவித்தார்.