டாக்டே புயல் குஜராத் மாநிலத்தை சூறையாடியுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் சென்று புயல் சேதத்தை பார்வையிட்டார். இதையடுத்து, குஜராத்துக்கு நிவாரண நிதியாக உடனடியாக 1000 கோடி ரூபாய் வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் சோம்நாத், அம்ரேலி, பாவ்நகர் மாவட்டங்கள் மற்றும் டயூவில் பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் குஜராத் மாநிலத்துக்கு 1000 கோடி ரூபாய் உடனடி நிவாரண நிதியாக வழங்கப்படும் என மோடி அறிவித்தார்.
மேலும், புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் மோடி அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுடன் மத்திய அரசு துணை நிற்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
புயல் பாதித்த இடங்களை பார்வையிட்ட பின்னர் அகமதாபாத்தில் அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் நிவாரண பணிகள் குறித்து மோடி கேட்டறிந்தார். பிரதமருடன் குஜராத் முதல்வர் விஜய் ருபானியும் உடனிருந்தார்.