டவ்-தே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குஜராத் கடற்கரை பகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசமான டையூ பகுதிகளை பிரதமர் மோடி இன்று வான் வழியாக சென்று பார்வையிட்டார்.
அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான டவ்-தே புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவா, டையூ அண்ட் டாமன், குஜராத் மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது.
புயல் கரையைக் கடந்தபோது குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பேய் மழை பெய்தது.இதனைத் தொடர்ந்து டவ்-தே” புயல் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது தற்போது மேலும் வலுவிழந்துள்ளது.
புயல் காரணமாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புயல் கரையைக் கடந்தபோது குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பேய் மழை பெய்தது.
மும்பையில் 114 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. மேலும் 24 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு ஏராளமான கட்டிட மேற்கூரைகள் பறந்தன. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன. கடல் கொந்தளிப்பால் பல படகுகள் சேதம் அடைந்தன. சுற்றுலா தலமான கேட்வே ஆப் இந்தியா கடற்கரை பலத்த சேதம் அடைந்தது.
டவ்-தே புயல் கரையை கடந்த குஜராத்தில் 13 பேரை உயிர் பலி வாங்கியுள்ளது. 160 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் அகமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் 16 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
மேலும் மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்ததோடு, ஆயிரம் மின்கம்பங்கள் சரிந்துள்ளன. மீட்புப்பணிகளில் பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குஜராத் கடற்கரை பகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசமான டையூ பகுதிகளை பிரதமர் மோடி இன்று வான் வழியாக சென்று பார்வையிட்டார்.
குஜராத் மாநிலம் பாவ்நகருக்கு விமானம் மூலம் வந்த பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து புயல் சேதங்களைப் பார்வையிட்டார். அவருடன குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் உடன் சென்றார்.
அகமதாபாத்தில் உயர் அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.