வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கல்மடு கிராம அதிகாரி பிரிவிலுள்ள மருதநகர் கிராமத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி மரண வீட்டில் கலந்து கொண்ட நாற்பத்தியொரு நபர்களுக்கு எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இருபத்தி நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் மரண வீட்டிற்கு பலர் சென்று வந்த நிலையில் மருதநகர் கிராமத்திலுள்ள மக்களின் பாதுகாப்பு கருதி இன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த கிராமத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை கிராமத்தினை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதுடன், பொலிஸ் மற்றும் பிரதேச சபையினரால் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் வழங்குமாறும் பணிப்புரை வழங்கப்பட்டது.
கல்குடா வலயக் கல்வித் தினைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும்,கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர்களுக்கும் முதற் கட்டமாக பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன.
இதேவேளை ஓட்டமாவடியில் 111 பேரிடம் மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையில் இருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




