ஸ்பெயின் நாட்டில் நடந்த ஒரு ஆய்வில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியைத் தொடர்ந்து இரண்டாம் டோசாக பிஃபிஸர் போடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தற்போது உலகெங்கும் போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகள் இரு டோஸ்களாக போடப்பட்டு வருகின்றது. ஒரே டோஸ் தடுப்பூசிகள் ஒன்றிரண்டு இருந்தாலும் இரு டோஸ் தடுப்பூசிகளே அதிகம் போடப்படுகின்றன. பொதுவாக கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் எந்த நிறுவன மருந்து போடப்படுகிறதோ அதே மருந்தை இரண்டாம் டோஸ் போட வேண்டும் என்பதே இதுவரை பின்பற்றப்படுகிறது.
இந்தியாவில் ஆஸ்டிரா ஜெனிகாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவன கோவாக்சின் ஆகிய இரு ஊசிகள் போடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட மருந்து போடப்பட்டவர்களுக்கு அதே மருந்து கிடைக்காததால் இரண்டாம் டோஸ் போடுவது ஒத்தி வைக்கப்பட்டது. இதையொட்டி மருத்துவ நிபுணர்கள் இரு டோஸ்களுக்கு இடையில் இடைவெளி விடுவது எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது என மக்களுக்கு அறிவுறுத்தினர்.
ஸ்பெயின் அரசு நிறுவனமான கார்லோஸ் இல் ஹெல்த் இன்ஸ்டிடியூட் ஒரு ஆய்வை நடத்தியது. இதில் ஏற்கனவே ஆஸ்டிரா ஜெனிகா நிறுவன கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களில் 600 பேருக்கு பிஃபிஸர் நிறுவன தடுப்பூசி போடப்பட்டுச் சோதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் இதனால் எவ்வித பக்க விளைவும் உண்டாகவில்லை எனவும் மாறாக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.