எம்மை நாமே ஆளும் உரிமையை வெல்லும் நாளே, முள்ளிவாய்க்காலில் சாகடிக்கப்பட்ட ஆன்மாக்கள் சாத்தியடையும். அந்த இலக்கை நோக்கி தளர்வின்றி – எந்தத் தளம்பலுமின்றி இலட்சிய வேட்கையுடன் ஆத்மார்த்தமாக உறுதிபூண்டு பயணிப்போம். இதை இந்தப் புனித நாளில் அந்த ஆன்மாக்கள் மீது சத்தியம் செய்து சொல்வோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆட்சிப்பிடிப்புக்கு முன்னர் தமிழ் இராச்சியம் அமையப்பெற்றிருந்தது. அந்நிய தேசத்து ஆட்சியாளர்கள் எங்களை ஆளும் உரித்தையும் சிங்களவர்களுக்கு வழங்கிப் பெருந்துரோகத்தை இழைத்தனர். அன்று தொடங்கிய எங்கள் மீதான் கொடுமை இந்தக் கணம் வரை எந்தச் சோர்வுமின்றித் தொடர்கின்றது.
அடித்தார்கள், வெட்டினார்கள், மிதித்தார்கள், எரித்தார்கள் எல்லாவற்றையும் பொறுத்துப்போனோம். பொறுமையின் எல்லையையும் தாண்டி அமைதி காத்தோம். சிங்கள – பௌத்த தீவிரவாத வெறியில் ஊறித் திளைத்தவர்களால் தமிழினத்தின் வேரறுக்காமல் இருக்க முடியவில்லை. படையெடுத்து ஆண்ட பரம்பரை வழிவந்தவர்கள் என்பதால் திருப்பியடித்தோம். முப்படையும் அமைத்து விடுதலைப் புலிகள் போரிட்டார்கள்.
வல்லரசுகளுடன் கூட்டிணைந்து விடுதலைப் புலிகள் அமைப்பு முள்ளிவாய்க்கால் மண்ணில் முடிக்கப்பட்டது. புலிகளை அழிப்பதாகச் சொல்லிப் போரைத் தொடக்கினார்கள். ஆனால் எங்கள் உறவுகளின் செந்நீரால் தமிழர் தாயகம் நனைந்தது. இலக்கியங்களில் இதிகாசங்களில் கேட்டறிந்த பேரவலத்திலும் பெரும் அவலத்தை கண்முன்னால் கண்டு துடித்து துவண்டோம். முள்ளிவாய்க்காலில் எங்கள் மூச்சடக்கினார்கள்.
அன்றைய அவலத்தின் எச்சங்களை இன்றும் சுமந்து கொண்டிருக்கின்றோம். 12 ஆண்டுகள் பறந்து விட்ட நிலையிலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடுகின்றோம். குண்டுத் தாக்குதல்களால் சிதறிப்போன உடல் பாகங்கள் மீண்டும் வளர்ந்து வராத என்ற ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உறவுகளைக் காண்கின்றோம். தாயக மண்ணில் பிறந்த பாவத்துக்காக, அப்பா, அம்மா என்று அழைக்கு முன்னரே காவு கொடுத்திட்ட பிஞ்சுகளும் எம் தேசத்தில் இன்றும் இருக்கின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் எம் துயரத்தின் அடையாளம் அல்ல. எமது இலட்சிய வேள்வி மீது சத்தியம் செய்து இலக்கை அடைவதற்கான உரிமைப் போரைத் தொடங்கும் புள்ளி. இனியும் அழுது அழுது ஆற்றாமையால் துடிப்பதை விடுத்து முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட எங்கள் அன்புறவுகளை மனதிலிருந்து இலக்கை அடையப் புறப்படுவோம். அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்போம். அந்த நீதியூடாக எங்களை நாங்களே ஆளும் உரித்தை அடைவோம். இன்றைய நாளில் ஒவ்வொருவரும் இதற்கு உறுதிபூணுவோம், என்றுள்ளது.