புதிய உருமாறிய வைரஸ் குழந்தைகளை அதிக அளவில் தாக்கும் என்று தெரியவந்துள்ளதால் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சிங்கப்பூரில் புதிதாக 38 பேருக்கு உள்ளூர் மக்கள் மூலம் கோவிட்-19 தொற்று பரவியிருக்கிறது. இதையொட்டி புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், சமூகப் பரவல் காரணமாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் குழுவாக சேர்வதை தவிர்க்க வேண்டும். இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பரவிய உருமாறிய புதிய வைரஸ் குழந்தைகளை அதிக அளவில் தாக்கி வருகிறது. இது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் திறன் பெற்றுள்ளது. எனவே வரும் புதன்கிழமை முதல் அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிடப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு முடியும் மே 28ஆம் தேதி வரை வீட்டிலிருந்த படியே பாடம் கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசியாவின் வர்த்தக சந்தையாக 5.7 மில்லியன் மக்களைக் கொண்ட சிங்கப்பூரில், கடந்த பல மாதங்களாக ஒற்றை இலக்கத்தில் அல்லது ஜீரோ புதிய பாதிப்புகள் பதிவாகி வந்தன. குறிப்பாக தெற்காசிய நாடுகளை ஒப்பிடுகையில் மிக மிக குறைவான பாதிப்புகளே சிங்கப்பூரில் உறுதி செய்யப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த சில வாரங்களில் புதிய பாதிப்புகள் கிடுகிடுவென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையொட்டி ஊரடங்கு விதிகளை கடுமையாக்கி அந்நாட்டு அரசு அமல்படுத்தி வருகிறது. இந்நாட்டில் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டு விட்டன. இந்த சூழலில் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.