மகாராஷ்ரா மாநிலம் புனேவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சாதவ், மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாதம் கொரோனா தொற்று இவருக்கு உறுதியானதை தொடர்ந்து, அவர் புனேவில் உள்ள ஜகாங்கீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூவில் வெண்டிலேட்டர் உதவியுடன் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமான நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். விதர்பா மண்டலத்தில் வலுவான தலைவராக காங்கிரஸ் கட்சியினால் பார்க்கப்பட்ட நிலையில், அவரது மறைவு அந்தக் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாதவின் மறைவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், “என் நண்பர் ராஜீவ் சாதவின் இழப்பு வருத்தம் அளிக்கிறது. அதிக ஆற்றல் கொண்ட, காங்கிரஸ் கொள்கைகளுடன் பிணைந்த அரசியல் தலைவர் ராஜீவ் சாதவ். இவரின் மறைவு நமக்கு பெரிய இழப்பு. அவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.