இஸ்ரேலிய பிரதமர், பாலஸ்தீனிய ஜனாதிபதியுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடினார். இரு தரப்பையும் மோதல் போக்கை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரத்தை ஆராய ஐநா பாதுகாப்பு சபை கூடவுள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது.
இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியாக மேற்கு கரை உள்ளது. இப்பகுதியின் ஜனாதிபதியான முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையில், ஜெருசலேமின் கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித தலமான அல்-அக்ஷா மத வழிபாட்டு தலத்தில் வழிபாட்டிற்காக கூடியிருந்த 90,000 இற்கும் அதிக பாலஸ்தீனியர்களை கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் பலவந்தமாக வெளியேற்ற முயன்றதை தொடர்ந்து மோதல் வெடித்தது.
பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு ரொக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலையடுத்து காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்த மோதலில் இருதரப்பிலும் இதுவரை மொத்தம் 145 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியான மேற்குகரையில் போராட்டம் நடைபெற்றது.
மேற்குகரையில் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். காசா பகுதியில் நடைபெற்று வரும் மோதல் மேற்கு கரை பகுதிக்கும் பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பதற்றத்தை தணிக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேலிய பிரதமர் பென்ஞமின் நெத்தன்யாகு மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் உடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜோ பைடன் இருதரப்பும் அமைதியை கடைபிடிக்கும் படி கூறினார். காசா முனை பகுதியில் அசோசியேட் பிரஸ், அல் ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் அமைந்திருந்த 12 மாடி கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
எவ்வாறாயினும், இது ஹமாஸ் இராணுவ அலுவலகங்களைக் கொண்ட ஒரு முறையான இராணுவ இலக்கு என்றும், தாக்குதலுக்கு முன்னர் கட்டிடத்திலிருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியது.
“ஊடகவியலாளர்கள் மற்றும் சுயாதீன ஊடகங்களின் பாதுகாப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது மிக முக்கியமான பொறுப்பு” என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஹமாஸின் அரசியல் கிளையின் மூத்த நபரான கலீல் அல்-ஹயேவின் வீட்டின் மீதும் இஸ்ரேல் குண்டு வீசியது. இதனால் ஏற்பட்ட சேதம் பற்றிய தகவல் எதுவும் இதுவரை வெளியாகல்லை. இதுவரை இராணுவ இலக்குகளை மட்டும் தாக்கிய இஸ்ரேல், ஹமாஸின் அரசியல் இலக்குகளையும் குறிவைத்துள்ளது.
“இந்த மோதலுக்கான குற்றம் சாட்டப்படும் தரப்பு நாங்கள் அல்ல, எங்களைத் தாக்கும் நபர்கள் ”என்று தொலைக்காட்சி உரையில் நெதன்யாகு கூறினார்.
“நாங்கள் இன்னும் இந்த நடவடிக்கையிலேயே இருக்கிறோம், அது இன்னும் முடிவடையவில்லை, இந்த நடவடிக்கை தேவையான வரை தொடரும்.” என்றார்.

ஹமாஸின் ஏவுகணை ஏவும் சுரங்க தளங்கள் நூற்றுக்கணக்கானவற்றை அழித்ததாக அவர் தெரிவித்தார். ஹமாஸ், ஜிகாத் அமைப்பினர் ஏராளமானவர்களை கொன்றதாகவும் கூறினார். எனினும், போராளி அமைப்புக்கள் அதை மறுத்துள்ளன. தமது தரப்பில் 20 பேர் வரையே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளன.
கடந்த திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காசாவிலிருந்து சுமார் 2,300 ரொக்கெட்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. சுமார் 1,000 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பால் அழிக்கப்பட்டன. 380 ரொக்கட்டுக்கள் காசா பகுதியில் விழுந்தன.
ஹமாஸ் மற்றும் பிற போராளி அமைப்புக்களை தாக்குவதாக கூறி, இஸ்ரேல் 1,000 க்கும் மேற்பட்ட வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை காசா பகுதிக்குள் நடத்தியுள்ளது.
கட்டாரில் சனிக்கிழமை திரண்டிருந்த ஏராளம் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, “சியோனிஸ்டுகள் நினைத்தார்கள், அவர்கள் அல்-அக்ஸா மசூதியை இடிக்க முடியும். ஷேக் ஜர்ராவில் எங்கள் மக்களை இடம்பெயர முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். நான் நெதன்யாகுவிடம் சொல்கிறேன்: நெருப்புடன் விளையாட வேண்டாம்“ என்றார்.