மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்புக் கடந்தான் பகுதியில் இன்று (15) சனிக்கிழமை காலை 4.30 மணியளவில் காட்டு யானை தாக்கிய நிலையில் சிறு காயங்களுடன் இளைஞர் ஒருவர் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
குறித்த இளைஞர் பெரிய மடு பகுதியில் உள்ள தனது தோட்டத்தை பார்வையிட்டு பின் மீண்டும் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இதன் போது பரப்புக்கடந்தான்-கட்டுக்கரை குள வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று சனிக்கிழமை காலை 4.30 மணியளவில், வீதியில் மறைந்திருந்த காட்டு யானை இளைஞர் மீது தாக்கியுள்ளது.
இதன் போது இளைஞர் மோட்டார் சைக்கிளில் இருந்து பாய்ந்துள்ளார்.
இதன் போது மோட்டார் சைக்கிளை யானை சேதப்படுத்தியுள்ளது.
அயலவர்களின் உதவியுடன் இளைஞர் மீட்கப்பட்டார். காயங்களுக்கு உள்ளான இளைஞர் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.