இது போன்ற நிச்சயமில்லாத ஒரு தருணத்தில் ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
‘ஹீரோ’ படத்துக்குப் பிறகு ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மார்ச் 26-ம் தேதி ‘டாக்டர்’ வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் சட்டமன்ற தேர்தல் காரணமாக படத்தின் வெளியீட்டை தேதி குறிப்பிடாமல் படக்குழுவினர் ஒத்திவைத்தனர்.
தற்போது கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறன்றன. திரையரங்குகள், ஷாப்பிங் மால் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல திரைப்படங்கள் வெளியாகாமல் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
‘டாக்டர்’ படத்தின் வெளியீட்டை தேதி குறிப்பிடாமல் படக்குழுவினர் ஒத்திவைத்ததால் ரசிகர்கள் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் குறித்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் ‘டாக்டர்’ படத்தின் வெளியீடு குறித்து அதன் தயாரிப்பாளரான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தினமும் ‘டாக்டர்’ படம் குறித்த அப்டேட்களை கேட்டு வருகிறீர்கள். முழுமையாக தயாரான ஒரு படத்தை கையில் வைத்துக் கொண்டு கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகள் அனைத்தையும் ஒரு தயாரிப்பாளராக தாங்கிக் கொண்டிருக்கிறேன். படம் நல்லமுறையில் ரிலீஸ் ஆக என் சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன்.
இன்னொரு பக்கம், கொரோனா இரண்டாவது அலையில் சுற்றங்களையும், நண்பர்களையும் இழந்து கொண்டிருக்கிறேன்.
இது போன்ற நிச்சயமில்லாத ஒரு தருணத்தில் ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் பாதுகாப்பக இருந்து உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஒரு பட வெளியீட்டை கொண்டாட ஒரு நாடாக நாம் மீள வேண்டும்.
இவ்வாறு கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் கூறியுள்ளார்.