கொரோனாவுக்கு முடிவே இல்லாமல் போகலாம் என கனடாவை சேர்ந்த மருத்துவ வல்லுநர் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸுடன் உலகமே போராடி வருகிறது. உலகம் முழுக்க கொரோனாவால் பல லட்சக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பரவலுக்கு முடிவே இல்லாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர். வைரஸ்கள் சூழலின் ஒரு அங்கமாக கொரோனா நிரந்தரமாக இருக்கலாம் என கனடாவை சேர்ந்த மூத்த வல்லுநர் தெரிவித்துள்ளார்.
கனடா அரசின் கோவிட்19 சிறப்பு படையை சேர்ந்த வல்லுநர் டாக்டர் ஆலன் பெர்ன்ஸ்டெயின், “கொரோனா வைரஸ் நிரந்தரமாகிவிடலாம். அதற்கு ஏற்ப தடுப்பூசிகளில் மாற்றம் செய்ய வேண்டும்.
இதை ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம். குளிர் காய்ச்சலுக்காக இன்பிளுயன்ஸா தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி மாறுபடும். ஏனெனில் இன்பியுளுயன்ஸா வைரஸும் மாறுபடுகிறது.
வரும் ஆண்டுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவத் தொடங்கலாம். அதில் சில வைரஸ்கள் ஆபத்தில்லாத லேசான பாதிப்பை ஏற்படுத்தும். சில வைரஸ்கள் பெரும் ஆபத்தாக இருக்கலாம். இத்தகைய உலகத்துக்குள் நாம் செல்லப்போகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.