இந்த ஆண்டின் முதல் புயல் அரபிக் கடலில் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் ( IMD) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 14ஆம் தேதி காலை தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது வடக்கு வடமேற்கு நோக்கி நகரக்கூடும். லட்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் தாழ்வு பகுதி மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. இதன்மூலம் லட்சத்தீவுகள், கடலோர கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 16ஆம் தேதி கிழக்கு மத்திய அரபிக் கடலில் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது.
அதன்பிறகு வடக்கு வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரும். குஜராத் மற்றும் பாகிஸ்தானுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கலாம். இதுபற்றி அடுத்த ஓரிரு நாட்களில் உறுதியான தகவல் தெரிந்துவிடும். இந்த புயல் உருவாகும் பட்சத்தில் நடப்பாண்டின் முதல் புயலாக கருதப்படும். இதற்கு ’தாக்டே’ (Tauktae) என்று பெயரிடப்படும். இதனை மியான்மர் நாடு ஏற்கனவே முடிவு செய்து வைத்துள்ளது.
தாக்டே என்றால் அதிகப்படியான ஒலி எழுப்பும் ஊர்வன என்று பொருள்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும். மேலும் வரும் வெள்ளிக்கிழமை முதல் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவுகள் – மாலத்தீவுகளை ஒட்டிய பகுதிகள், கிழக்கு மத்திய அரபிக்கடலை ஒட்டிய பகுதிகள், கர்நாடகாவின் கடற்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
வரும் சனிக்கிழமை முதல் கிழக்கு மத்திய அரபிக்கடல், மகாராஷ்டிரா – கோவா கடற்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மே 15, 16 ஆகிய தேதிகளில் லட்சத்தீவுகளுக்கு அருகே உள்ள கடற்பகுதிகளில் அலையின் சீற்றம் ஒரு மீட்டர் வரை இருக்கக்கூடும். முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு அரபிக்கடல் பகுதியில் 5.8 கி.மீ வரை நிலவும்,
வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 14ஆம் தேதி வரை மணிக்கு 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும். மாலத்தீவு பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் சூறாவளி காற்று வீசும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் அரபிக்கடலில் சூறாவளி காற்று வீசும் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.