கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் இந்தியாவுக்கு ரூ.110 கோடியை நிவாரணத் தொகையாக வழங்குவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவில் நிலவும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தினசரியாக இந்தியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரி பலி எண்ணிக்கையும் 3 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது.
நாட்டின் பல மாநிலங்களில் ஒக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறாத சூழலும் ஏற்பட்டது.
இந்த நிலையில் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு தங்களால் இயன்ற உதவிகளை மருத்துவப் பொருளாகவும், நிதியாகவும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் ஃபேட்ரிக் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடும் இந்தியாவுக்கு உதவ சுமார் ரூ.110 கோடியை கேர் (CARE), எய்டு இந்தியா (AID INDIA), சேவா (sewa) ஆகிய மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.