இங்கிலாந்தில் ஊரடங்கின் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் பொது முடக்கம், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகள் அமலில் உள்ளன. கொரோனா தொற்று சற்று குறையத் தொடங்கியதும் இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வந்தன. இதனிடையே, கொரோனாவின் இரண்டாவது அலை, மூன்றாவது அலைகள் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இருப்பினும், கொரோனா பாதிப்புக்கு ஏற்றவாறு உலக நாடுகள் தளர்வுகளையும், கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், தடுப்பூசி போடும் பணியால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் குறைந்து வருவதால், பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட திட்டத்திற்கு இணங்க, இங்கிலாந்து நாட்டில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இங்கிலாந்தில் ஊரடங்கின் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தளர்வுகள் வருகிற 17ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தடுப்பூசி, புதிய வகை கொரோனாவால் ஏற்படும் ஆபத்துகள், மருத்துவமனைகள், இறப்புகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தளர்வுகளின் அடுத்தக்கட்டம் அறிவிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் அளிக்கப்பட்டு வரும் தளர்வுகளின்படி, 3ஆம் கட்டமாக ஆறு பேர் வரை அல்லது இரண்டு குடும்பங்களை சேர்ந்த 6 பேர் வரை வீடுகளுக்குள் சந்தித்துக் கொள்ளலாம். பப்புகள், ரெஸ்டரெண்டுகளில் உள்ளே உட்கார்ந்து உணவருந்தலாம், மதுவகைகளை அருந்த அனுமதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. சினிமா தியேட்டர்கள், விளையாட்டு அரங்கங்கள் திறந்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கட்டிப்பிடிப்பது போன்ற தனிப்பட்ட தொடர்புகள் சில அறிவுறுத்தல்களுடன் அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், பொதுமக்கள் பாதுகாப்பாக கட்டிப்பிடித்துக் கொள்ளலாமா என்பது எனக்கு தெரியாது. ஆனால், பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று சில அறிவிப்புகளை வெளியிடுவார் என்று மன ஆரோக்கியத்துக்கான அமைச்சர் நாடின் டோரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் மாறுபாடுகள் பரவி வருவதால், சமூகத்தை மிக விரைவாக மீண்டும் திறக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும், சமூக தொடர்புக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் ஜூன் 21ஆம் தேதிக்குள் நீக்க முடியும் என்று அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.