கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் சிலருக்கு கண் பார்வை பறிபோகும் சம்பவம் நாடு முழுக்க பல இடங்களில் நடைபெற்றுள்ளது. ஏன் இவ்வாறான பாதிப்பு ஏற்படுகிறது, இதற்கும் கொரோனாவுக்கும் என்ன சம்மந்தம், இதன் அறிகுறிகள் என்னென்ன, இதிலிருந்து எப்படி தடுப்பது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
கொரோனாவால் வரும் மற்றொரு சோதனை!
கொரோனாவால் மீண்ட சிலர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் கண் பார்வையை இழந்துள்ளனர். அதாவது இவர்களுக்கு கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் எனும் நோய் தாக்குதல் ஏற்படுகிறது. அதன் விளைவாகவே கண் பார்வையை இழப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராயப்பா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மியூகோர்மைகோசிஸ் என்றால் என்ன?
கொரோனாவால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டு ஐசியூவில் சிகிச்சை பெறுவர்களுக்கு ஸ்டீராய்டு எனும் அதிக சக்தி வாய்ந்த மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இதனால் கொரோனாவிலிருந்து வெளியே வருகின்றனர். ஆனால் அதன்பின்னர் இரு வாரங்களில் அவர்கள் கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் சர்க்கரை அளவை இந்த பூஞ்சை அதிகரிப்பதாகவும் இதனால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டில் ஒருவர் உயிரிழப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்னென்ன?
ஸ்டீராய்டு அதிகளவில் செலுத்தப்படுவதால் உடலில் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் கண் வலி, கண் வீக்கம், பார்வை இழப்பு ஏற்படும். பாதிப்பு அதிகரிக்கும் போது மூளையையும் பாதிக்கும். ஆரம்ப கட்டத்தில் கன்னம், கண் பகுதிகளில் வலி ஏற்படும், மூக்கிலிருந்து ரத்தம் ஏற்படும் அப்போதே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள்!
இல்லையேல் மூக்கில் பிரச்சினை ஏற்படும், சைனஸ் பிரச்சினை ஏற்படும். ரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். அடைப்பு ஏற்படும் பகுதிகளில் உறுப்புகள் செயலிழக்கும் என்று மருத்துவர் ராயப்பா கூறியுள்ளார். இது புதிய நோய் கிடையாது. சிலருக்கு இந்த பூஞ்சை தொற்று இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எதுவும் செய்வதில்லை.
சர்க்கரையை கட்டுப்படுத்துங்கள்!
இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் இந்த நோய் பரவாது. எதிர்ப்பு சக்தி குறைந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். இதைத் தடுக்க அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவர்களை உடனடியாக அணுகவேண்டும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும், மருத்துவர் அனுமதி இல்லாமல் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்ள கூடாது என்று மருத்துவர் ராயப்பா எச்சரித்துள்ளார்