ஹீரோக்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தாலும் இளம் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்யலாம். ஆனால் நடிகைகளுக்கு மட்டும் அது பொருந்தாது என்று அம்ரிதா ராவ் தெரிவித்துள்ளார்.
இரண்டு குழந்தைகள் இருந்தாலும் ஹீரோக்கள் மட்டும் இளம் நடிகைகளை ரொமான்ஸ் செய்வார்கள். ஆனால் நடிகைகளால் அப்படி செய்ய முடியாது என்கிறார் அம்ரிதா ராவ்.
அம்ரிதா ராவ்
இந்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மும்பையை சேர்ந்த அம்ரிதா ராவ். அவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார். ஆர்ஜே அன்மோலை 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் கூறிய விஷயம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குழந்தை பிறந்த பிறகு என் கெரியரில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களை நினைத்து கவலையாக இருக்கிறது. மாற்றத்தை நினைத்து பயப்படத் தான் செய்வோம். இதெல்லாம் பெண்களுக்கு மட்டுமே நடக்கிறது. ஆண்களுக்கு நடப்பது இல்லை. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் இருந்தால் கூட ஹீரோக்கள் இளம் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வார்கள். குழந்தைகளால் ஹீரோக்களின் கெரியர் பாதிக்கப்படுவது இல்லை. ஆனால் ஹீரோயின்களுக்கு அப்படி இல்லை என்கிறார் அம்ரிதா ராவ்.
1950கள், 60கள் மற்றும் 70களில் எல்லாம் இந்த நிலைமை இல்லை. நடிகைகள் நுத்தன், ஷர்மிளா தாகூர் ஆகியோர் திருமணத்திற்கு பிறகும், ஏன் குழந்தைகள் பிறந்த பிறகும் கூட தங்களின் கெரியரில் வெற்றிகரமாக இருந்தனர். ஆனால் தற்போது அப்படி இல்லை. 1980களில் இருந்து எல்லாம் திடீர் என்று மாறிவிட்டது என அம்ரிதா ராவ் தெரிவித்துள்ளார்.
ஹீரோக்களுக்கு திருமணமானாலும், குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் தங்களை விட சிறு வயது ஹீரோயின்களுடன் டூயட் பாடுகிறார்கள். ஏன் அவர்கள் பேரன், பேத்தி எடுத்தாலும் கூட இளம் நடிகைகளுடன் நடிக்கிறார்கள். ஆனால் அது நடிகைகளுக்கு மட்டும் நடக்காது என்று ஏற்கனவே சில பாலிவுட் நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அம்ரிதா ராவும் அதையே கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.