வடக்கு மாகாணத்தில் தற்காலிக சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் தர வேண்டும் என வடமாகாண ஆளுநர் செயலகம் முன் இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் யுத்த காலத்தில் சேவையாற்றிய 840 பேரை சுகாதாரத் தொண்டர்களாக வடக்கு மாகாண சபையினால் உள்வாங்கப்பட்டனர்.
பின்னர் வடமாகாண ஆளுநர் குரே காலத்தில் 130 பேர் சுகாதார தொண்டர்கள் தற்காலிகமாக கடமையாற்றிய நிலையில் அவர்களையும் இணைத்து 970 பேர் சுகாதாரத் தொண்டர்களாக பணி நிரந்தர நியமனம் கேட்டு போராடி வருகிறோம்.
சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத் தேர்வு இரு தடவைகள் இடம்பெற்ற நிலையில் ஊழல்கள் இருப்பதாக நாம் அறிகிறோம்.
இறுதி யுத்தத்தின் போது கடமையாற்றிய சுகாதார தொண்டர்கள் இறுதியாக இடம்பெற்ற நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படவில்லை.
எம்முடைய சகல ஆவணங்களும் ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட நிலையில் நேர்முகத் தேர்விற்கு எம்மை அழைக்காமை பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.