கொரோனா பாதிப்பிற்கு ஆளான நபர்களிடம் இருந்து 6 அடி வரை நோய்த்தொற்று அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் புதிய வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, காற்றின் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்கு கோவிட்-19 வைரஸ் பரவும். இதனை சுவாசிக்கும் அனைவருக்கும் நோய்த்தொற்று பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா நோயாளிகளுக்கு மிக அருகில் இருந்தாலோ அல்லது அவர் பயன்படுத்திய பொருட்களை தொட்டாலோ தான் வைரஸ் பரவும் என்ற நிலை இருந்தது. ஆனால் இனி பாதிப்பிற்கு ஆளான நபர்களிடம் இருந்து 6 அடி தூரத்தில் இருந்தால் கூட காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு காற்றோட்டம் குறைந்த அல்லது அதிக கூட்டம் நிறைந்த உள்ளரங்கங்களில் நடைபெறும் நிகழ்வுகள் முக்கிய காரணமாகும். ஏனெனில் போதிய அளவில் காற்றோட்டம் இல்லாத காரணத்தால் வைரஸ் கிருமிகள் காற்றிலேயே நீண்ட நேரம் நிலைத்திருக்கும். இதன்மூலம் காற்றில் ஒரு மீட்டர் தூரம் வரை கூட பயணிக்க வாய்ப்புள்ளது.
எனவே காற்றோட்டம் இல்லாத வீடுகளில் நெருங்கிய உறவினர்களிடம் கூட முகக்கவசம் அல்லது போதிய சரீர இடைவெளியின்றி பழக வேண்டாம். இத்தகைய வீடுகளுக்குள் இருப்பதை விட காற்றோட்டம் நிறைந்த வெளியிடங்களில் போதிய சரீர இடைவெளி விட்டு இருக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கப் பள்ளிகளில் மாணவர்களின் இருக்கைகளுக்கு இடையில் 3 அடி இடைவெளி மட்டுமே விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அந்நாட்டு நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 6 அடி வரை கொரோனா வைரஸ் காற்றில் பரவும். அதுவும் காற்றோட்டம் குறைவாக இருக்கும் மூடிய இடங்களில் ஆபத்து அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் உரிய மாற்றங்கள் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.