கொரோனா தொற்றுக்குள்ளான தனது 14 வயது மருமகனை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்ற இலண்டன் ஓ.எல் பரீட்சைக்கு தோற்றுவதற்காக அழைத்துச் சென்ற மாமா முறையான ஒருவருக்கும் அவரது மருமகனுக்கும் எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், வழக்குத் தொடர உள்ளதாக, கஹத்துட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், மத்தேகொட- பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீடொன்றுக்கு இரகசியமாக வந்துள்ளார். அங்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், வைத்தியசாலைக்குச் செல்லும் எதிர்பார்ப்பில் இருந்த 14 வயது சிறுவனை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்குச் சென்றுள்ளமை தெரியவந்தள்ளது.
குறித்த மாணவன், பரீட்சைக்குத் தோற்றியதை, அதே பாடசாலையில் கல்வி பயிலும் மற்றுமொரு மாணவன் கண்டுள்ளார்.
அத தனது தந்தைக்கு தெரிவித்ததையடுத்து, இந்த விடயம் உறுதியானது.
இதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச பாடசாலை ஒன்றால் ஏற்பாடு செய்யப்பட்ட பரீட்சையிலேயே குறித்த மாணவன் தோற்றியுள்ளார்.
அப்பரீட்சையில், சுமார் 6,000 மாணவர்கள் பல சந்தர்ப்பங்களில் இப்பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தையடுத்து, கேம்பிரிட்ஜ் சர்வதேச கல்வி நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பரீட்சையை நிறுத்தியிருந்தது.