சீனாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில், “ சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம், சினோவாக் கொரோனா தடுப்பு மருந்துகளை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சீனாவின் தடுப்பு மருந்துகள் பாதுகாப்பாகவும், பயனளிக்கக் கூடியதாகவும் உள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கொரோனா தடுப்பூசிகள் அந்நாட்டில் லட்சக்கணக்கான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது, அத்துடன் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகள் அமீரகம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பைஸர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் போன்ற மேற்கத்திய தடுப்பு மருந்துகளுக்கு மட்டுமே உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் சீனாவின் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.
உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.