முன்னதாக, வாட்ஸ்அப் மே 15 ஆம் தேதிக்குள் தங்களின் தனியுரிமை கொள்கைகளைப் பயனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் வாட்ஸ்அப்பை மே 15 க்கு பிறகு பயன்படுத்த முடியாது என்று தெரிவித்திருந்தது. இதற்காக வாட்ஸ்அப் நிறுவனமே ஸ்டேட்டஸ் வைத்து எல்லாம் தங்களின் தனியுரிமை கொள்கை குறித்து மக்களுக்கு விளக்கம் அளித்தது.
ஆனால், இந்த தனியுரிமை கொள்கைகள் காரணமாக தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருவதால் இப்போது தனியுரிமை கொள்கைகளைப் பயனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், தனியுரிமை கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் மே 15 பிறகும் வாட்ஸ்அப் பயன்படுத்தமுடியும் என்றும், எந்த வாட்ஸ்அப் கணக்கும் நீக்கப்படாது என்றும் வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் PTI யிடம் தெரிவித்துள்ளார்.
இந்த 2021 ஆண்டின் ஜனவரி மாதத்தில், App Notification மூலம் வாட்ஸ்அப் அதன் சேவை விதிமுறைகள் மற்றும் பொதுக் கொள்கையில் மாற்றங்கள் குறித்து பயனர்களுக்கு அறிவித்தது. அதையடுத்து வாட்ஸ்அப் சேவையை பயனர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு புதிய விதிமுறைகளை ஒப்புக்கொள்ள பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நிறுவனம் காலக்கெடு வழங்கியது.
இதனால் பயனர்கள் சிக்னல், டெலிகிராம் போன்ற பாதுகாப்பான மற்றும் இலவசமாக கிடைக்கும் மெசேஜிங் செயலிகளுக்கு மாற தொடங்கினர். அதையடுத்து, நிலைமையை சுதாரித்துக்கொண்ட வாட்ஸ்அப் இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடுவை மே 15 ஆம் தேதி வரை ஒத்திவைத்தது. அதையடுத்து இப்போது, இந்த காலக்கெடுவை நீக்கி, பயனர்கள் தனியுரிமைக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் முக்தா வாரியார் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.