முதல்வராகப் பதவி ஏற்றபின் முதல்வர் ஸ்டாலின் எந்தத் திட்டத்துக்கு முதல் கையெழுத்தைப் போடப்போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், கரோனா நிவாரண நிதி ரூ.4000 அளிக்கும் விதமாக இந்த மாதமே ரூ.2000 வழங்கும் அரசாணை உள்ளிட்ட 5 அரசாணைகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றபோது முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக விவசாயக் கடன் ரத்து, கூட்டுறவு நகைக் கடன் ரத்து என்ற கோப்பில் போடுவதாக இருக்கும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதேபோல் தேர்தல் அறிக்கையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்தியபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.4000 கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 அன்று வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதுதவிர இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, நூறு நாளில் மக்கள் குறை தீர்க்கும் திட்டம் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று கோட்டையில் தனது அறைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், கோப்பில் முதல் கையெழுத்தாக எந்தத் திட்டத்துக்குப் போடுவார் என்கிற கேள்வி எழுந்த நிலையில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
1. முதல் அரசாணையாக கரோனா நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு கருணாநிதி பிறந்த நாளில் ரூ.4000 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை முதல் தவணையாக மே மாதத்திலேயே ரூ.2000-ஐ குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரசாணை. இதன்படி 2 கோடியே, 7 லட்சத்து 66,000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.
2. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது. அது இந்த மாதம் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
3. மகளிர், பணிக்குச் செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் நாளை முதல் அமல்.
4. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற திட்டத்தின் கீழ் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற திட்டத்தின் கீழ் துறை உருவாக்கப்படுகிறது. இதற்காக ஐஏஎஸ் அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்படுகிறார்.
5. கரோனா சிகிச்சை பெறுவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும்.
மேற்கண்ட 5 கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்தாகப் போட்டுள்ளார்.