யாழ் நகரின் ஒரு வீதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் உயிரிழந்த 77 வயதான முதியவர் ஒருவரின் சடலம் தவறுதலாக உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட சம்பவம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள், அவர் நேற்று காலை உயிரிழந்திருந்தார்.
அவரது உடலை நேற்று மதியமே வைத்தியசாலை நிர்வாகம் உறவினர்களிடம் கையளித்தது.
நேற்று இரவு வெளியான பிசிஆர் முடிவுகளில் அவருக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது.
தொற்றாளர்களின் விபரத்தின்படி, அவரது முகவரிக்கு யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் நேற்றிரவு தேடிச் சென்ற போது, குறிப்பிட்ட நபரின் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுகாதாரப்பிரிவினர் மேலதிக விசாரணை நடத்திய போதுதான், நடந்த விபரீதம் தெரிய வந்தது.
இதையடுத்து சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு உறவினர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அங்கு கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டது.
இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ் நகரின் ஸ்ரான்லி வீதியில்- புகையிரத வீதியுடன் செல்லும் வீதியான அந்த பகுதியில் பலர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதால் வீதியின் ஒரு பகுதி தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கோம்பையன் மணல் மயானத்தில் சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது.