கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்கவும், உப பிரதேச செயலகமாக தரமிறக்குவதாக அனுப்பப்பட்ட கடிதத்தை இரத்து செய்யவும் அமைச்சர் சமல் ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இன்று அவரை சந்தித்து கல்துரையாடிய போது இந்த இணக்கத்தை தெரிவித்தார்.
கல்முனையை தரமிறக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த கலந்துரையாடல் நடந்தது.
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் வரலாற்றை தமிழ் பிரதிநிதிகள் தெளிவுபடுத்தினர்.
எல்லைமீள்நிர்ணய நடவடிக்கைகள் முடிவும் வரை, கல்முனை தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது, எல்லை மீள்நிர்ணய நடவடிக்கைகளின் பின்னர் அடுத்த கட்டத்தை ஆராயலாமென அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் நிர்வாக அதிகாரத்தை பெற, கணக்காளர் நியமிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டது.
இதையும் சமல் ராஜபக்ச ஏற்றுக்கொண்டார்.
அத்துடன் முல்லை கரைத்துறைப்பற்றில் 08 கிராம சேவையார் பிரிவுகளதும் காணிநிர்வாகத்தினை மகாவலி அதிகார சபைபொறுப்பேற்பதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறும் அமைச்சர் சமல்ராஜபக்ச பணித்துள்ளார்.
இது தொடர்பில் குழு அமைத்து ஆராயும்வரை எந்த நடவடிக்கையும் மேலதிகமாகநடைபெறாதனவும் அவர் கூறியுள்ளார்.
மீண்டும் ஒரு தடவை தமிழ் கட்சிகள் அவருடன் சந்திப்பை நடத்துவதென இணக்கம் காணப்பட்டது.




