நடப்பு ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஒரே ஓவரில் 36 ரன்களை அடித்ததன் மூலம், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருப்பவர் ரவீந்திர ஜடேஜா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணியிலும் ஓர் மிக முக்கிய அங்கமாக இருக்கும் ஜடேஜாவைப் பற்றி சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்:
சவுராஷ்டிராவில் உள்ள நவாகம்-கேத் என்ற ஊரில், 1988-ம்ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி ஜடேஜா பிறந்தார். ஜடேஜாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அவரது அப்பா தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டி கார்டாக இருந்தார். தனது மகனை ராணுவப் பள்ளியில் சேர்த்து ராணுவ வீரராக மாற்ற ஜடேஜாவின் அப்பா விரும்பியுள்ளார். ஆனால் ஜடேஜாவுக்கு சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீதுதான் ஆர்வம் இருந்துள்ளது. சிறுவயதிலேயே தாயை இழந்த நிலையில், அவரது கவலையை மறப்பதற்கான விஷயங்களில் ஒன்றாக கிரிக்கெட் மாறியுள்ளது. 2006-07-ம் ஆண்டில் துலிப் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகளில் சவுராஷ்டிரா அணிக்காக ஆடியதன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் தடம் பதித்துள்ளார் ஜடேஜா. 2008-09-ம் ஆண்டில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியதன் மூலம் இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார்.
கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக ஜடேஜாவுக்கு மிகவும் பிடித்த விஷயம் குதிரை வளர்ப்பு. கங்கா, கேசர் ஆகிய 2 குதிரைகளை வளர்த்துவரும் ஜடேஜா, கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நாட்களில் பெரும்பாலும் அவற்றுடன்தான் பொழுதைக் கழிப்பார்.
‘சர்’ என்றும், ‘ராக்ஸ்டார்’ என்றும் செல்லமாக அழைக்கப்படும் ஜடேஜாவுக்கு, ராஜ்காட் நகரில் ‘ஜாதுஸ் ஃபுட் பீல்ட்’ என்ற ஓட்டல் இருக்கிறது. டிசம்பர் மாதம் பிறந்தவர் என்பதால் ஜடேஜாவுக்கு பிடித்த எண்ணாக 12 உள்ளது.